உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதத்தை வேடிக்கை பார்க்க மாட்டோம்

பயங்கரவாதத்தை வேடிக்கை பார்க்க மாட்டோம்

புதுடில்லி, ''பயங்கரவாத நடவடிக்கைகளை, இன்றைய இந்தியா துளியும் சகித்துக் கொள்ளாது. மும்பை பயங்கரவாத தாக்குதலை கைகட்டி வேடிக்கை பார்த்த முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியை போல நாங்கள் இருக்க மாட்டோம். பயங்கரவாதிகளுக்கு உடனுக்குடன் பதிலடி தருவோம்,'' என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.'என்.டி.டி.வி.,' ஊடக நிறுவனத்தின், 'இந்தியன் ஆப் தி இயர்' விருது வழங்கும் விழாவில் நேற்று பங்கேற்ற நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:மும்பையில், 2008, நவ., 26ல் பாகிஸ்தானின் லஷ்கர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்காமல் அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வேடிக்கை பார்த்தது. ஆனால் இன்றைக்கு நிலைமையே வேறு. ராணுவ விவகாரங்களில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் அணுகுமுறை, முன்பு இருந்ததை அடியோடு மாற்றியுள்ளது.மும்பை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்காமல் அன்றைய அரசு மவுனம் காத்தது. ஆனால், உரி மற்றும் பாலகோட் தாக்குதல் வாயிலாக பாகிஸ்தானுக்கு நாம் பதிலடி கொடுத்தோம். பயங்கரவாத நடவடிக்கைகளை இன்றைய இந்தியா துளியும் சகித்துக் கொள்ளாது. மும்பை பயங்கரவாத தாக்குதலை கைகட்டி வேடிக்கை பார்த்த முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியை போல நாங்கள் இருக்க மாட்டோம். உடனுக்குடன் பதிலடி தருவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

'இது புதிய தலைமுறை'

இந்த விழாவில், அமைச்சர் ஜெய்சங்கருக்கு, 'இந்தியா பர்ஸ்ட்' விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், ''நான் என் வாழ்நாள் முழுதும் அரசு பணியிலும், அரசுகளுக்காகவும் உழைத்திருக்கிறேன். நம் நாட்டை நவீனமயமாக்கவும், பல்வேறு சீர்திருத்தங்களை செய்யவும் இவ்வளவு உறுதியான அர்ப்பணிப்பு உடைய பிரதமர் நம்மிடம் இருக்கிறார். இது நம் வாழ்வில் ஒரு முக்கிய தருணம். ''ஒரு காலத்தில் நம் மக்களின் கனவாக இருந்தவை இன்று அவர்களின் தேவைகளாக மாறியுள்ளன. இந்த தலைமுறை, 'எதையும் செய்து முடிப்போம்' என்ற சிந்தனையில் உறுதியுடன் உள்ளது. இந்த தலைமுறை, 'புல்லட்' ரயில்களை உருவாக்குகிறது, சந்திரயான் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது, எல்லையில் சீனாவை உறுதியுடன் எதிர்கொண்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை