உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5 பேரை கத்தியால் குத்திய பெங்களூரு ரவுடிக்கு வலை

5 பேரை கத்தியால் குத்திய பெங்களூரு ரவுடிக்கு வலை

இந்திரா நகர்: இந்திரா நகர் உணவகத்தில் ரவடி ஒருவர், ஐந்து பேரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.பெங்களூரு உணவகம் ஒன்றில் ஒருவர், வாடிக்கையாளர்களை கண்மூடித்தனமாக கத்தியால் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக பரவியது. தாக்குதலில் சம்பவத்தில் ஈடுபட்டவர், 'சீரியல் கில்லர்' என்று செய்தி பரவியது. போலீசாரும் அந்த வீடியோவை பார்த்தனர்.வீடியோவில், 'பானிபூரி விற்பனை செய்பவரிடம் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், பின் அவரை கத்தியால் வெட்டி, தடுக்க வந்த நபரையும் கத்தியால் குத்துவதும், இதைப் பார்த்து, உணவகத்தில் சாப்பிட வந்தவர்கள் அலறி அடித்து ஓடுவதும், அதற்குள் மற்றொருவரையும் அந்த நபர் சரமாரியாக கத்தியால் குத்துவதும் பதிவாகியிருந்தன. இந்த காட்சிகள் அதிர்வலைகளை ஏற்படுத்தின.அந்த வீடியோ குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் இந்திரா நகர் பகுதியில் உள்ள உணவகத்தில் 8ம் தேதி தாக்குதல் சம்பவம் நடந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து இந்திரா நகர் போலீசார் சம்பவம் நடந்த உணவகத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.சம்பவ தினத்தன்று, மொத்தம் ஐந்து பேரை அந்த நபர் தாக்கியது தெரிய வந்தது. இந்த காட்சிகள் ஹோட்டலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. போலீசார் விசாரணை நடத்தி, இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த கடம்பா, 28, என்ற ரவுடி என்பதை கண்டுபிடித்தனர்.கடம்பா மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. சமீபத்தில் தான் சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளி வந்ததும் மீண்டும் தன் வேலையை காட்ட துவங்கியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.இதுகுறித்து பெங்களூரு கிழக்கு போலீஸ் டி.சி.பி., தேவராஜா கூறியதாவது:உணவகத்தில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர், 'சீரியல் கில்லர்' இல்லை. அவர் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. இந்திரா நகர் போலீஸ் நிலையத்தில் கடம்பா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் உண்மை அறியாமல், பொய்யான செய்தியை பரப்ப வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.'பெங்களூரில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்கள் மீது போலீசார் நடவடிக்கைகள் எடுப்பதற்கு பதிலாக, பாதுகாப்பாக இருப்பது குறித்து, சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்' என, பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை