| ADDED : நவ 21, 2025 01:24 AM
அமராவதி: விவசாயிகள், தங்களுக்கான நெல் கொள்முதல் இடம், நேரம் மற்றும் கொள்முதல் அளவை, 'வாட்ஸாப்' செயலி வாயிலாக அவர்களே தேர்வு செய்யும் வசதியை ஆந்திர அரசு அறிமுகப்படுத்த உள்ளது. ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. பல்வேறு சலுகைகள் அம்மாநில விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில், தங்களுக்கான நெல் கொள்முதல் இடங்களை, 'வாட்ஸாப்' செயலி வாயிலாக விவசாயிகளே தேர்வு செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது குறித்து மாநில குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் மனோகர் நேற்று கூறியதாவது: விவசாயிகள் தங்களுக்கான நெல் கொள்முதல் இடங்களை தேர்வு செய்ய, 73373 59375 என்ற, 'வாட்ஸாப்' எண்ணில் தொடர்பு கொள்ளலாம். க்யூ.ஆர்., குறியீடு பின், அவர்களின் ஆதார் எண் மற்றும் பெயர் சரிபார்ப்புக்கு பின், நெல் கொள்முதல் செய்ய இடம் மற்றும் நேரத்தை தேர்வு செய்யும் விருப்பம் அவர்களுக்கு வழங்கப்படும். அதில், தங்களுக்கு பொருத்தமான இடத்தையும், குறிப்பிடப்பட்டுள்ள மூன்று நேரங்களில் ஏதாவது ஒன்றையும் விவசாயிகள் தேர்வு செய்து கொள்ளலாம். தாங்கள் எடுத்துச்செல்லும் நெல் வகைகள் மற்றும் எத்தனை மூட்டைகள் போன்ற விபரங்களையும், இந்த சேவை மூலம் விவசாயிகள் வழங்க முடியும். இடம் மற்றும் நேரத்தை தேர்வு செய்த பின், அதை உறுதி செய்யும் வகையில், க்யூ.ஆர்., குறியீடு ஒன்று அவர்களுக்கு வழங்கப்படும். இந்த சேவை வாயிலாக, தங்களுக்கான நெல் கொள்முதல் நிலையங்களை விவசாயிகள் உடனடியாக தேர்வு செய்ய முடியும். கொள்முதல் செயல்முறையின் போது, விவசாயிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை, இதன் வாயிலாக தவிர்க்கப்படுகிறது. செயல்முறையும் மிகவும் சுலபமாக முடியும். இவ்வாறு அவர் கூறினார்.