உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் யார்? பா.ஜ.,வினருக்கு முதல்வர் சித்தராமையா கேள்வி

விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் யார்? பா.ஜ.,வினருக்கு முதல்வர் சித்தராமையா கேள்வி

பெங்களூரு: ''விவசாயிகள் மீது துப்பாக்கிசூடு நடத்தியவர்கள்,'' என, பா.ஜ.,வை, முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தலைமையில், கோலாரில் நேற்று பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டம் குறித்து, முதல்வர் சித்தராமையா பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:

சுருங்கிய எலிகள்

மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க, நிவாரணத்தொகை விடுவிக்காமல், மத்திய அரசு ஏமாற்றி வருகிறது. பிரதமர் மோடியை கேள்வி கேட்க முடியாத, கர்நாடக பா.ஜ., தலைவர்கள் எனக்கு எதிராக போராட்டம் நடத்தி, நாடகமாட ஆரம்பித்துள்ளனர்.இங்கு சிங்கம், புலி போன்று இருக்கும், பா.ஜ.,வினர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பார்த்தவுடன், சுருங்கிய எலிகளாக மாறி விடுகின்றனர். கடந்த 2008ல் பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது, உரம் கேட்டு போராட்டம் நடத்திய, விவசாயிகள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இதில் ஒரு விவசாயி இறந்தார்.

முட்டாள்கள் இல்லை

எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும்படி, நாங்கள் கேட்டபோது, 'பணம் அச்சடிக்கும் இயந்திரமா வைத்திருக்கோம்?' என, அவர் கேட்டார்.டில்லியில் போராட்டம் நடத்திய, விவசாயிகளை தாக்கியதும், பா.ஜ., அரசு தான். பா.ஜ.,வினர் தங்களுக்காக முதலை கண்ணீர் வடிக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ளாத அளவுக்கு, விவசாயிகள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.வறட்சி அறிக்கை கிடைத்ததும், காங்கிரஸ் அரசு 223 தாலுகாக்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்தது. வறட்சியால் 37,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது தெரிந்தது. பிரதமர் மோடியை, நானும், வருவாய் அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடாவும் சந்தித்து 18,177 கோடி நிவாரணம் ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டோம். மத்திய குழுவும் இங்கு வந்து, ஆய்வு செய்தனர். அவர் கொடுத்த அறிக்கையின் நிலை என்னவென்று தெரியவில்லை.

ராமராலும் முடியாது

வறட்சி நிவாரண நிதி விடுவிக்கக் கோரி, மத்திய அரசுக்கு இதுவரை 17 கடிதங்கள் எழுதி உள்ளோம். ஆனால் எந்த பதிலும் இல்லை. இப்படி இருக்கும் நிலையில், எங்கள் மீது பா.ஜ.,வினர் எப்படி புகார் கூற முடியும்?மத்திய அரசின் அநீதியால், கர்நாடகா விவசாயிகள் சோர்ந்து போய் உள்ளனர். மத்திய அரசு நிதி விடுவிக்கவில்லை என்றாலும், விவசாயிகளை கர்நாடகா அரசு கைவிடவில்லை. வறட்சி நிவாரணமாக மாவட்ட கலெக்டர்களின் வங்கிக்கணக்குகளில் 870 கோடி ரூபாய் உள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு, டேங்கர் மூலம் குடிநீர் வினியோகம் செய்கிறோம். தனியார் நிலங்களில் ஆழ்துளை கிணறுகள் தோண்ட 3,000 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. வறட்சி நிவாரணம், நிதி கமிஷன் மானியம் உட்பட பல வழிகளில், கர்நாடகாவுக்கு, மத்திய அரசு அநீதி இழைக்கிறது.இதுபற்றி மாநிலத்தில் இருந்து, தேர்வு செய்யப்பட்ட 25 பா.ஜ., - எம்.பி.,க்கள் எதுவும் கேட்காமல், வாய்மூடி கொண்டு இருக்கின்றனர். விவசாயிகளுக்கு துரோகம் செய்பவர்களை, ஸ்ரீராமராலும் காப்பாற்ற முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்