ம.ஜ.த., -உறுப்பினர்களுக்கு சட்டசபையில் வழிகாட்டி யார்?
தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ., கர்நாடகாவில் மாறி, மாறி ஆட்சிக்கு வருகிறது. ஆனால் மாநில கட்சியான ம.ஜ.த.,வால் தனியாக ஆட்சிக்கு வர முடியவில்லை.ஒவ்வொரு தேர்தலிலும் இரண்டு தேசிய கட்சிகளுடனும் கூட்டணி சேர்ந்து விடுகின்றனர். இத்தனைக்கும் ம.ஜ.த., முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் கட்சியாகும். ஒரு காலத்தில் கர்நாடக அரசியலில் கோலோச்சிய தேவகவுடா, முதல்வராகவும் இருந்தார். பின், அவர் தேசிய அரசியலுக்கு சென்றபின் அவரது இளைய மகன் குமாரசாமி கட்சியில் பொறுப்புகளை ஏற்றார். முதல்வர் பதவி
பா.ஜ., வுடன் கூட்டணி அமைத்து ஒரு முறையும், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஒரு முறையும் முதல்வர் ஆனார். ஆனால் இரண்டு முறையும் முழுமையாக ஐந்து ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருக்கவில்லை.குமாரசாமியும் தேசிய, மாநில அரசியலில் மாறி, மாறி இருந்தார். ம.ஜ.த., கட்சிக்கு பழைய மைசூரில் தான் செல்வாக்கு அதிகமாக உள்ளது. கடந்த 2018 சட்டசபை தேர்தலில், ம.ஜ.த., 37 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் 33 இடங்கள் பழைய மைசூரில் இருந்து கிடைத்தவை. நிகில் தோல்வி
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், ம.ஜ.த., வெறும் 19 இடங்களில் தான் வெற்றி பெற்றது. தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா எம்.எல்.ஏ.,வாக இருந்தாலும் சட்டசபை கட்சி தலைவர் பதவி அவருக்கு கிடைக்கவில்லை. குமாரசாமிக்கு தான் பதவி கிடைத்தது.அரசுக்கு எதிராகவும், தங்களது எம்.எல்.ஏ.,க்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் சட்டசபையில் பேசி வந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நடந்த லோக்சபா தேர்தலில் மாண்டியாவில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் கனரக தொழில் அமைச்சராக உள்ளார்.அவரது ராஜினாமாவால் காலியான சென்னப்பட்டணா தொகுதிக்கு நடந்த தேர்தலில், குமாரசாமி மகன் நிகில் போட்டியிட்டார். அவர் கண்டிப்பாக வெற்றி பெற்று சட்டசபைக்கு வருவார். தங்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்வார் என ம.ஜ.த., -- எம்.எல்.ஏ.,க்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் நிகில் தோற்று விட்டார். தற்போது சட்டசபையில் ம.ஜ.த., தலைவராக சுரேஷ்பாபு இருந்தாலும், காரசாரமாக பேசும் தன்மை அவரிடம் கிடையாது. மென்மையாக பேசக்கூடியவர்.இதனால் கூட்டணி கட்சியான பா.ஜ., தலைவர்களை நம்பியே, ம.ஜ.த., -- எம்.எல்.ஏ.,க்கள் இருக்க வேண்டும். அரசுக்கு எதிராக பேசும்போது இனி கவனமாக பேச வேண்டும். இதனால் ம.ஜ.த., -- எம்.எல்.ஏ., க்கள் கலக்கத்தில் உள்ளனர். - -நமது நிருபர் --