உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாவணகெரே தொகுதியில் போட்டியிடுவது யார்? எம்.பி.,யை வம்புக்கு இழுக்கும் ‛ மாஜி அமைச்சர்

தாவணகெரே தொகுதியில் போட்டியிடுவது யார்? எம்.பி.,யை வம்புக்கு இழுக்கும் ‛ மாஜி அமைச்சர்

முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா மீது தாவணகெரே பா.ஜ., - 'எம்.பி., சித்தேஸ்வர் ஆதரவாளர்கள் கடுப்பில் உள்ளனர்.தாவணகெரே லோக்சபா தொகுதி பா.ஜ., - எம்.பி., சித்தேஸ்வர், 72. காங்கிரஸ் மூத்த தலைவரும், அகில இந்திய வீரசைவ லிங்காயத் மகாசபை தலைவருமான, சாமனுார் சிவசங்கரப்பாவின் மருமகன்.ஆனால், மாமனார் - மருமகன் இடையில், பல ஆண்டுகளாக குடும்ப பிரச்னை உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும், மருமகனை தோற்கடிக்க மாமனார் 'பிளான்' போடுகிறார். ஆனால் மருமகனே வெற்றி பெற்று வருகிறார்.

4 முறை வெற்றி

கடந்த 2004, 2009, 2014, 2019 என தொடர்ந்து, நான்கு முறை சித்தேஸ்வர் வென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு வயதாகி விட்டதால், தாவணகெரே தொகுதியில் வேறு ஒருவரை களமிறக்க பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது. அவரோ, 'இன்னும் எனக்கு தேர்தலில் போட்டியிடும் தகுதி உள்ளது' என, கூறி வருகிறார்.சித்தேஸ்வருக்குப் பதிலாக வேறு ஒருவருக்கு வாய்ப்பு அளிக்க, பா.ஜ., திட்டமிட்டது பற்றி அறிந்ததும், பா.ஜ., முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா, 'சீட்' கேட்டு வருகிறார்.கடந்த சட்டசபை தேர்தலில் தோற்றதும், இருக்கும் இடம் தெரியாமல் ரேணுகாச்சார்யா இருந்தார். விஜயேந்திரா மாநில தலைவர் ஆனதும், எப்படியும் 'சீட்' வாங்கி விடலாம் என்ற மிதப்பில் அலைகிறார்.

ஆதரவாளர்கள் கடுப்பு

சித்தேஸ்வர், சித்ரதுர்கா மாவட்டத்துக்காரர். அவருக்கு இம்முறை தாவணகெரே தொகுதி, 'சீட்' கொடுக்கக் கூடாது என்று, ரேணுகாச்சார்யா கறாராக பேசுகிறார். தாவணகெரே வடக்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ரவீந்திரநாத்தையும், சித்தேஸ்வருக்கு எதிராக துாண்டிவிடும் வேலையை செய்து வருகிறார். இதனால் சித்தேஸ்வரின் ஆதரவாளர்கள் கடுப்பில் உள்ளனர்.சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வக்கு இல்லை. எம்.பி., 'சீட்' கேட்குதா என, ரேணுகாச்சார்யாவை வசைபாட ஆரம்பித்து உள்ளனர். நான்கு முறை சித்தேஸ்வர் வெற்றி பெற்றபோது, அவர் வெளிமாவட்டக்காரர் என்று தெரியவில்லையா என்றும், கேள்வி எழுப்புகின்றனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி