பிரசவித்த பெண்கள் பலியானது ஏன்? பிம்ஸ் மருத்துவமனையில் பகீர்!
பல்லாரி: பல்லாரி மாவட்ட அரசு மருத்துவமனையில், குழந்தை பெற்ற பெண்கள் இறப்புக்கு தரமற்ற குளுக்கோஸே காரணம் என்பதை, அரசு அமைத்த கமிட்டி கண்டறிந்துள்ளது.பல்லாரியில் அரசு சார்ந்த பிம்ஸ் மருத்துவமனையில், கடந்த இரண்டு வாரங்களில், பிரசவத்துக்கு பின் ஐந்து பெண்கள் உயிரிழந்தனர். நவம்பர் 9ம் தேதி, கர்ப்பிணியருக்கு 'சிசேரியன்' செய்து, பிரசவம் நடைபெற்றது. அதன் பின் ஏழு பெண்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டது. இதில் ஐந்து பேர் அடுத்தடுத்து இறந்துவிட்டனர்.இறப்புகள் நடந்ததால், இங்கு வரவே கர்ப்பிணியர் அஞ்சினர். டாக்டர்களின் அலட்சியமே இதற்கு காரணம் என, எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து, பல்லாரி மருத்துவமனையில் பெண்கள் இறக்க என்ன காரணம் என்பது குறித்து ஆய்வு செய்ய, டாக்டர்கள் சவிதா, பாஸ்கர், ஹர்ஷா அடங்கிய வல்லுனர் கமிட்டியை மாநில அரசு அமைத்தது. அவசர அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.பல்லாரி பிம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று, கமிட்டியினர் விசாரணை நடத்தி, இறப்புக்கான காரணத்தை கண்டுபிடித்தனர். அரசுக்கு அறிக்கை அளித்தனர். அதில், 'மருத்துவமனையில் பெண்களின் இறப்புக்கு, தரமற்ற ஐ.வி., குளுக்கோஸ் கொடுத்ததே காரணம்' என, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.'சிசேரியன் முடிந்த பின், தாய்மார்களுக்கு ஐ.வி., குளுக்கோஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது தரமானதாக இல்லை. இதுவே அவர்களின் இறப்புக்கு காரணம்' என, அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதை தீவிரமாக கருதிய சுகாதாரத்துறை, 'இனி இந்த குளுக்கோசை பயன்படுத்த வேண்டாம்' என, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், வல்லுனர் அறிக்கையை பகிரங்கப்படுத்தாமல், ரகசியமாக வைத்துள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.