போபால் விஷவாயு ஆலையில் இன்னும் நச்சுகழிவுகள்: உயர்நீதிமன்றம் கண்டனம்
போபால்: போபால் விஷயவாயு கசிவு சம்பவத்திற்கு காரணமான செயல்படாத யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் நச்சு கழிவுகளை இன்னும் அப்புறப்படுத்தாதற்கு கண்டனம் தெரிவித்த போபால் உயர்நீதிமன்றம் 4 வாரங்களுக்குள் நச்சு கழிவுகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது.மத்திய பிரதேச தலைநகர் போபாலில், 1984 டிச., 3-ம் தேதி யூனியன் கார்பைடு' எனும் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து திடீரென விஷவாயு கசிந்தது. எம்.ஐ.சி., எனப்படும் மீத்தைல் ஐசோ சையனைடு விஷவாயு போபால் நகரம் முழுதும் பரவியதில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. பல கோடி இழப்பீடும் வழங்கப்பட்டது.இந்நிலையில் வாயு கசிவுக்கு காரணமான யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் இன்னும் நச்சு கழிவுகள் இருப்பதாகவும் இக்கழிவுகளால் மீண்டும் பேராபத்து ஏற்படும் எனவும், இதனை அப்புறப்படுத்த கோரி போபால் உயர்நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடரப்பட்டது.நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கினை, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கைட் மற்றும் நீதிபதி விவேக் ஜெயின் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், கூறியது, பேரழிவு நிகழ்ந்து 40 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நச்சுகழிவுகள் இருப்பதும், இது தொடர்பாக ஏற்கனவே, உயர்நீதிமன்றம்,உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த பின்னும் அதனை அப்புறப்படுத்துவற்கான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பது வருத்தமடைய வைக்கிறது.இன்னும் நான்கு வார காலத்திற்குள் நச்சு கழிவுகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நச்சுக் கழிவுகளை கொண்டு செல்லும் போதும் அகற்றும்போதும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.இதற்கான செலவை உயர்நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியபடி மத்திய , மாநில அரசுகளே பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவித்தனர்.