இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு ஏன்? பார்லி.,யில் ஜெய்சங்கர் விளக்கம்!
புதுடில்லி, “தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் பிரச்னையில் நமக்கு உதவிகள் செய்ததாலேயே, இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுத்துள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் என இரு நாடுகள் தீர்வு என்பதில் உறுதியாக உள்ளோம். ''அதே நேரத்தில், பயங்கரவாதத்தையும், பிணைக்கைதிகளை பிடித்துச் செல்வதையும் ஏற்க முடியாது,” என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் லோக்சபாவில் நேற்று தெரிவித்தார். தாக்குதல்
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே, கடந்தாண்டு அக்., 7ல் போர் துவங்கியது. இஸ்ரேலுக்குள் ஹமாஸ் நுழைந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த போர் துவங்கியது.காசா, மேற்கு கரை ஆகியவை அடங்கிய பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே இருந்த பிரச்னை, தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்னையாக மாறியுள்ளது.இந்நிலையில், இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு தொடர்பாக, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. ஐ.நா., பொது சபையில், இஸ்ரேல் - காசா போர் தொடர்பான தீர்மானங்களில், இந்தியா ஓட்டெடுப்பில் பங்கேற்காதது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.இதற்கு பதிலளித்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பேசியதாவது: இஸ்ரேல் - காசா போர் தொடர்பாக ஐ.நா.,வில், 13 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அதில், 10ல் இந்தியா ஓட்டளித்தது. அதே நேரத்தில், மூன்று தீர்மானங்களின் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது.இஸ்ரேல் - காசா இடையே போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். பேச்சு வாயிலாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. இந்தியாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல்
இந்த போரின்போது நடந்துள்ள பயங்கரவாத தாக்குதல்கள், பிணைக் கைதிகளை பிடித்துச் செல்வது போன்றவற்றை நாம் எதிர்க்கிறோம்.நம் நிலைப்பாட்டுக்கு ஏற்ற வகையில் தீர்மானங்கள் இல்லாததாலேயே, அதன் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தோம். இஸ்ரேல் - பாலஸ்தீனம் என இரு நாடுகள் தீர்வுக்கு நாம் ஆதரவாக உள்ளோம். அதே நேரத்தில், இது பரஸ்பர பேச்சு வாயிலாக ஏற்பட வேண்டும். பயங்கரவாதத்தை ஏற்க முடியாது.தங்கள் மீது நடக்கும் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நாடுகளுக்கு உரிமை உள்ளது. அந்த வகையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளோம்.இந்தியா - இஸ்ரேல் இடையேயான உறவு நீண்ட வரலாறு உள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவம் என, நம் நாடுகளுக்கு இடையே வலுவான நட்பு உள்ளது. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நாம் சந்தித்தபோது, இஸ்ரேல் நமக்கு உதவியது. அதனாலேயே, அதற்கு ஆதரவாக உள்ளோம்.வெளியுறவு கொள்கைகளின்போது, நம் நாட்டின் பாதுகாப்பு மிகவும் அடிப்படையானது. இதைத் தவிர, சர்வதேச சூழல் உள்ளிட்டவற்றையும் பார்த்து, நம் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.