உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிஷாவில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் விழித்துக்கொள்ளுமா பா.ஜ., அரசு?

ஒடிஷாவில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் விழித்துக்கொள்ளுமா பா.ஜ., அரசு?

கடற்கரையோர மாநிலமான ஒடிஷா, நம் நாட்டின் ஏவுகணை சோதனைகளுக்கு பெயர் பெற்றது. புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின்போது இம்மாநிலம் அதிகம் பேசப்படும். தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலமாக ஒடிஷாவின் பெயர் அடிபடுகிறது. மிரட்டல் சமீபத்தில், இங்குள்ள பலிஹரிசந்தி கடற்கரையில் தனிமையில் பேசிக் கொண்டிருந்த காதலர்களை, ஒரு கும்பல், 'மொபைல் போனில்' படம்பிடித்து பணம் கேட்டு மிரட்டியது. அவர்கள் தர மறுத்ததால், அந்த கும்பலைச் சேர்ந்த இருவர், 19 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். தடுக்க வந்த காதலனை மரத்தில் கட்டி வைத்து தாக்கினர். இந்த சம்பவம் ஒடிஷா முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்த, தற்போது சமூக, அரசியல் பிரச்னையாக உருவெடுத்து இருக்கிறது. அடுத்ததாக, பாலசோரில் கல்லுாரி மாணவி தீக்குளிப்பு சம்பவம். பேராசிரியரின் பாலியல் துன்புறுத்தல் குறித்து பலமுறை அந்த மாணவி புகார் அளித்தும் கண்டுகொள்ளப்படவில்லை. அதன் விளைவு, மாணவியின் உயிரையே பறித்து விட்டது. இதனால், ஆவேசமடைந் த கல்லுாரி மாணவ - மாணவியர் மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்தனர். வன்முறை, பதற்றத்தை தடுக்க கல்லுாரி மாணவியருக்காக, 'சக்திஸ்ரீ' என்ற பாதுகா ப்பு திட்டத்தை அரசு அமல்படுத்தியது. ஆனால், அது போராட்டத்துக்கான எதிர்வினையாக மட்டுமே இருந்ததே தவிர, குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கையாக இல்லை என பலர் விமர்சிக்கின்றனர். புள்ளி விபரம் மூன்றாவதாக புவனேஸ்வர் கமிஷனர் அலுவலகத்திற்குள்ளே யே நடந்த படுகொலை. அதுவும் போக்குவரத்து பெண் காவல ரை, அவரது கணவரே கொலை செய்திருக்கிறார். தேசிய ஆவண காப்பகத்தின் புள்ளி விபரங்களும், ஒடிஷாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாகவே சுட்டிக் காட்டுகின்றன. பா.ஜ., தலைமையில் அங்கு ஆட்சி அமைந்துள்ள நிலையில், கடந்த 2024ல் மட்டும் பெண்களுக்கு எதிராக, 37,611 குற்றங்கள் பதிவாகி இருக்கின்றன. இந்த புள்ளி விபரத்தின் அடிப்படையில் உத்தர பிரதேசம், மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஒடிஷா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதே சமயம் தனி நபர்களுக்கு எதிரான குற்றங்களில், ஒடிஷா முதலிடத்தில் இருக்கிறது. ஒரு லட்சம் பெண்களில் சராசரியாக 90.2 பேர் பாதிக்கப்படுவதாக மற்றொரு புள்ளி விபரம் சொல்கிறது. நிலை மை கைமீறி சென்று கொண்டிருப்பதால், பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்கக்கோரி அம்மாநில சட்டசபையிலும் குரல்கள் ஒலிக்கின்றன. இதனால், மாவட்ட அளவில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தி இருப்பதாக சொல்லி இருக்கிறார் பா.ஜ.,வைச் சேர்ந்த மாநில முதல்வரான மோகன் சரண் மாஜி. பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனிப்பிரிவு, 24 சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், 'இவை எல்லாம் ஏட்டு சுரைக்காய் போல வெறும் காகிதங்களில் மட்டுமே இருக்கின்றன. செயல்பாட்டுக்கு வரவில்லை' என, அதிருப்தி தெரிவித்திருக்கிறார் சமூக ஆர்வலரான நம்ரதா தாஸ். மறுபுறம் அம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்களோ, தங்களுக்கு பாதுகாப்பையும் கடந்து பொருளாதார, அரசியல் அதிகார அங்கீகாரம் வேண்டும் என குரல் எழுப்புகின்றனர். அந்த குரல் கோராபுத் மலைத்தொடர்களில் இருந்து, கட்டாக் வீதிகள் வரை எதிரொலிக்கிறது. ஒடிஷா அரசு இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும். - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை