மேலும் செய்திகள்
முன்னாள் படை வீரர்களுக்கு... முதல் மரியாதை!
13-Nov-2024
சிக்கபல்லாபூரின், அரிகெரே கிராமத்தில், 'விளையாட்டு கிராமம்' அமைக்க, விளையாட்டு துறை திட்டமிட்டது. இந்த திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளதால், விளையாட்டு வீரர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.சிக்கபல்லாபூர் நகரில் விளையாட்டு வீரர்களின் வசதிக்காக, அரிகெரே கிராமத்தில், 'விளையாட்டு கிராமம்' அமைக்க, விளையாட்டு துறை திட்டமிட்டது. கிராமத்தின் சர்வே எண் 10ல், 173.39 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 50 ஏக்கர் பரப்பளவில், அமைக்க இடம் அடையாளம் காணப்பட்டது. வீரர்களுக்கு உதவி
இந்த நிலத்தில் திட்டத்தை செயல்படுத்துவதன் சாதகம், பாதகங்கள் குறித்து, பெங்களூரு மாவட்டத்தின் விளையாட்டு பயிற்சியாளர்கள் தலைமையிலான குழுவினர், ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என, விளையாட்டு துறை துணை இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். இதன்படி அதிகாரிகள், 2021ன் ஆகஸ்டில் அந்த இடத்தை ஆய்வு செய்தனர். இங்கு, 'விளையாட்டு கிராமம்' அமைப்பதால், விளையாட்டு வீரர்களுக்கு உதவியாக இருக்கும் என, அறிக்கை அளித்தனர்.அறிக்கை அளித்து மூன்றரை ஆண்டு கடந்துள்ளது. அதன்பின் பணிகளில் எந்த முன்னேற்றமும் தென்படவில்லை. இதனால் விளையாட்டு வீரர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். 'விளையாட்டு கிராமம்' அமைந்தால், விளையாட்டு பயிற்சி பெறும் வீரர்களுக்கு அதிக உதவியாக இருந்திருக்கும்.சிக்கபல்லாபூர் மாவட்டத்தில், விளையாட்டு வீரர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களுக்கு சரியான பயிற்சி அளித்தால், தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம். இதை மனதில் கொண்டே 2020ல் அன்றைய பா.ஜ., அரசில், மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த சுதாகர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களை உருவாக்க, 'விளையாட்டு கிராமம்' அமைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். 50 ஏக்கர்
இதன்படி இடம் அடையாளம் காணும்படி, சிக்கபல்லாபூர் தாசில்தாரிடம், விளையாட்டு துறை வேண்டுகோள் விடுத்தது. அவரும் அரிகெரே கிராமத்தின் அருகில் 50 ஏக்கர் நிலம் அளிப்பதாக கூறினார். இடம் தயாராக இருந்தும் அங்கு, அமைக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை.சர்வதேச அளவிலான சிந்தடிக் டிராக், பாஸ்கெட் பால் விளையாட்டு அரங்கம், ஹாக்கி விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம், ஜுடோ ஹால், டென்னிஸ் விளையாட்டு அரங்கம், பாக்சிங், சைக்கிளிங், துப்பாக்கி சுடும் பயிற்சி மையம், குஸ்தி களம் உட்பட பல்வேறு விளையாட்டு அரங்கங்கள் 50 ஏக்கர் பரப்பளவில், ஒரே கூரையின் கீழ் அமைக்கப்படும்.சர்வதேச அளவிலான விளையாட்டு வசதிகளும், இங்கு இருக்கும். இங்கு சிக்கபல்லாப்பூர் மட்டுமின்றி, கர்நாடகாவின் மற்ற மாவட்டங்களின் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறவும் உதவியாக இருக்கும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதில், விளையாட்டு துறை அக்கறை காட்டவில்லை என, விளையாட்டு வீரர்கள் வருந்துகின்றனர். இனியாவது திட்டத்தை செயல்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதை, பொறுத்திருந்து பார்க்க வேண்டும். - நமது நிருபர் -
13-Nov-2024