வாட்ஸாப் மெசேஜ் அனுப்பி காதலன் வீட்டில் பெண் தற்கொலை
திருவனந்தபுரம்:ஓணம் கொண்டாட்டத்திற்கு காதலன் சென்றதால், மாணவி வாட்ஸாப்பில் தகவல் அனுப்பி தற்கொலை செய்தார். கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முடக்கல்லுாரை சேர்ந்தவர் ஆயிஷா ரஷா, 21. மங்களூரில் தனியார் பிசியோதெரபி கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். இவருக்கு வெங்கேரி பன்னடிகல் பகுதியைச் சேர்ந்த பஷீர்தீன் முகம்மது அறிமுகம் ஆகினார். உடற்பயிற்சி மாஸ்டரான இவரும் மாணவியும் காதலித்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் மாணவி இவரது வீட்டுக்கு சென்றிருந்தபோது, பஷீர்தீன் ஓணம் கொண்டாட்டத்திற்கு செல்வதாக கூறினார். அங்கு செல்ல வேண்டாம் என்று ஆயிஷா ரஷா கூறியும் பஷீர்தீன் சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆயிஷா ரஷா, 'என் சாவுக்கு நீயே காரணம்' என்று பஷீர்தீனுக்கு வாட்ஸாப்பில் குறுந்தகவல் அனுப்பிவிட்டு துாக்கிட்டு தற்கொலை செய்தார். கோழிக்கோடு போலீசார் பஷீர்தீனை கைது செய்து விசாரிக்கின்றனர்.