| ADDED : ஜன 02, 2024 11:18 PM
வானுார்:புதுச்சேரி, லாஸ்பேட்டை ராமதாஸ் தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கரன். இவரது மனைவி கீதா, 46. ஆங்கில புத்தாண்டையொட்டி இருவரும் நேற்று முன்தினம் காலை 9:30 மணிக்கு, புதுச்சேரியில் இருந்து ஆரோவில் அடுத்த இரும்பை மகாகாளேஸ்வரர் கோவிலுக்கு ஸ்கூட்டரில் சென்றனர். ஸ்கூட்டரை சிவசங்கரன் ஓட்டினார்.புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில், இடையஞ்சாவடி குதிரை பண்ணை வளைவு அருகே வந்தபோது, புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து, திண்டிவனம் சென்று கொண்டிருந்த, 'கிரான்ட் ஐ10' கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தறிகெட்டு ஓடி, சிவசங்கரன் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது மோதி, சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது.காரின் 'ஏர் பேக் பலுான்' விரிவடைந்ததால், கார் டிரைவர் காயமின்றி தப்பினார். இந்த விபத்தில், சிவசங்கரன், கீதா இருவரும் படுகாயமடைந்தனர். ஆரோவில் போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கீதா இறந்தார்.