உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பங்குகளை அடமானம் வைத்து ரூ.1 கோடி வரை கடன் பெறலாம்

பங்குகளை அடமானம் வைத்து ரூ.1 கோடி வரை கடன் பெறலாம்

மும்பை: ஆர்.பி.ஐ., கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில், மும்பையில் கடந்த 29ம் தேதி துவங்கி நேற்று முன் தினம் வரை மூன்று நாட்கள் பணக் கொள்கை குழு கூட்டம் நடந்தது. இதில், வங்கிகளுக்கான ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யப்படாமல், 5.50 சதவீதமாக பராமரிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சஞ்சய் மல்ஹோத்ரா கூறியதாவது: பங்கு சந்தை முதலீடுகள் மற்றும் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடன் வழங்கும் வரம்பை அதிகரிக்கவும், விதிமுறைகளை எளிதாக்கவும் ரிசர்வ் வங்கி முன்வந்துள்ளது. இதன்படி, பங்குகளை அடமா னம் வைத்து கடன் பெறும் உச்ச வரம்பை தற்போதுள்ள 20 லட்சத்திலிருந்து, 1 கோடி ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பிக்க வழங்கப்படும் கடன் வரம்பை 10 லட்சத்திலிருந்து, 25 லட்சம் ரூபாயாக அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. சில்லரை முதலீட்டாளர்கள் முதல், அதிக சொத்து மதிப்புள்ள தனி நபர்கள் வரை இது பயனுள்ளதாக இருக்கும். இணைப்புக்கு கடன் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் இணைப்பு மற்றும் கையகப்படுத்தல்களுக்கு கடன் வழங்க, உள்நாடு தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது நாள் வரை வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வெளிநாட்டு வங்கிகள் மட்டுமே இதற்கு கடன் வழங்க அனுமதி உள்ளது. தொழில் துறையினரிடம் கருத்து கேட்ட பின், இது தொடர்பாக விரைவில் இறுதி விதிமுறைகள் வெளியிடப்படும். ஏற்றுமதியாளர்கள் வெளிநாட்டு கரன்சியில் ஈட்டும் வருவாயை ஒரு மாதத்துக்குள்ளாக இறக்குமதிகளுக்கு பயன்படுத்த வேண்டும் அல்லது திருப்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்த காலக்கெடுவை மூன்று மாதங்களாக நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இலவச டிஜிட்டல் சேவை குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்பை பராமரிக்க அவசியமில்லாத வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும், இனி டிஜிட்டல் வங்கி சேவை இலவசமாக வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த கணக்குகளுக்கு வழங்கப்படும் சேவைகளையும் விரிவுபடுத்தி உள்ளது. ரூபாய் உலகமயமாக்கல் எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளில் ரூபாயின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, பூடான், நேபாளம் மற்றும் இலங்கையில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, இந்திய ரூபாயில் கடன் வழங்க அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை