சிறுவனை கடத்திச் சென்று தாக்கிய வாலிபர் சிக்கினார்
புதுடில்லி: முன்விரோதம் காரணமாக, 6 வயது சிறுவனை கடத்திச் சென்று சரமாரியாக தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். புதுடில்லி ஷகுர் பஸ்தி யை சேர்ந்தவர் முஹமது சமேம்,23. கடந்த, 4ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு, வடமேற்கு டில்லி சுபாஷ் பிளேஸ் பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுவனை கடத்திச் சென்றார். ரயில் நிலையம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சிறுவனை சரமாரியாக தாக்கி புதரில் வீசி விட்டு தப்பினார். இதற்கிடையில், 3ம் தேதி இரவு 7:00 மணிக்கு கடைக்குச் சென்ற தன் ஆறு வயது மகனைக் காணவில்லை என ஒரு பெண் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தே டினர். கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். ரயில் நிலையம் அருகே புதரில் ரத்தக் காயங்களுடன் கிடந்த சிறுவனை மீட்டனர். அவனிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் ஷகுர் பஸ்தியில் பதுங்கி இருந்த முஹமது சமேமை கைது செய்தனர். சிறுவனின் பெற்றோருடன் இருந்த முன்விரோதம் காரணமாக, குழந்தையை கடத்திச் சென்று தாக்கியதாக சமேம் வாக்குமூலம் அளித்துள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சமேம், சிறையில் அடைக்கப்பட்டார்.