நிறுவனச் சட்டம் (கார்ப்பரேட் லா) - அறிமுகம்
இந்த வளர்ச்சி காரணமாக கார்ப்பரேட் வழக்கறிஞர்களுக்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஜனநாயகத்தின் 3வது அங்கமாகிய சட்டத்தைப் பயில விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை உலகெங்கும் அதிகரித்து வந்துள்ளது. வழக்கறிஞர்கள் என்றாலே வெள்ளைச் சட்டையும் கருப்பு அங்கியும் அணிந்து தங்களது வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருப்பதும் வாதிடும் திறன் மூலமாகப் புகழ் பெறுவதும் நம் கண் முன் விரிகின்றன. வழக்கறிஞர்களின் திறமையானது செய்திகளாக மாறுவதுடன் வளமான வாழ்க்கைக்கும் ஏற்ற துறையாக உள்ளது. கார்ப்பரேட் லா என்பது என்ன? கார்ப்பரேட் லா என்பது நிறுவனங்களுக்கான சட்டத்துடன் தொடர்புடையது. நிறுவனங்களை உருவாக்குவதில் தொடங்கி, டிசொல்யூஷன் முறையான நிறுவன மூடுதல் வரையிலான அனைத்துடனும் இது தொடர்புடையது. நிறுவனங்களை இயக்குவது, நிறுவன மறுசீரமைப்பு, கார்ப்பரேட் கவர்னன்ஸ் போன்றவையும் இதோடு தொடர்புடையதே. பல்வேறு சட்ட நிறுவனங்கள் அவற்றின் உட்பிரிவுகளின் தன்மையைப் பொறுத்து தனித் துறைகளாகப் பிரித்து செயல்படுகின்றன. கார்ப்பரேட் லா துறையில் புகழ் பெற வாணிபம் தொடர்புடைய அறிவு, சட்ட நுணுக்கங்களை அறிவது, வாடிக்கையாளரின் தொழில் பற்றிய தெளிவு, தொழில் தொடர்பான துறையறிவு போன்றவை கட்டாயம் தேவைப்படும். நிறுவனச் சட்டம் தொடர்புடைய வழக்கறிஞர்களுக்கு சிறு வணிகர்கள், தனியார் தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், மருந்தியல் கழகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் என்று பல தரப்பட்ட வாடிக்கையாளர்களையும் ஒரே நேரத்தில் அணுக வேண்டியிருக்கும். பணித் தேவைகள் நாம் ஏற்கனவே கூறியது போல கார்ப்பரேட் பிரிவில் வியாபார ஒப்பந்தங்கள் மேற்கொள்வது, நிறுவனச் செயல்பாடுகளை வரையறுப்பது என்று முக்கியப் பணிகள் அனைத்தும் இடம் பெறுகின்றன. பொதுவாக ஒரு நிறுவன வழக்கறிஞராகப் பணி புரியும் போது கீழ்க்கண்ட முக்கியப் பணிகளை வழக்கறிஞர்கள் மேற்கொள்கிறார்கள். உரையாடலில் ஒப்புக் கொள்ள வைப்பது, ஆய்வு மற்றும் கடிதத் தொடர்பு, ஒப்பந்தப் படிவங்களை எழுதுவது மற்றும் அலசுவது, கார்ப்பரேட் நிறுவனங்களை உருவாக்குவது மற்றும் பராமரிப்பது, மத்திய மற்றும் மாநில அமைப்புகளுக்கு மனு தாக்கல் செய்வது ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொள்கின்றனர். துறைப் படிப்பு என்ன? பிளஸ் 2வில் எந்தப் பிரிவில் படித்திருந்தாலும் அதன் பின் 5 ஆண்டு படிக்கக் கூடிய பி.ஏ., பி.எல்., படிப்பைத் தேர்வு செய்யலாம். ஏற்கனவே பட்டம் பயின்றவர்கள் 3 ஆண்டுகளில் படிக்கும் எல்.எல்.பி.,யைத் தேர்வு செய்து படிக்கலாம். பி.ஏ., பி.எல்., 5 ஆண்டு படிப்பை இந்தியாவில் இன்று 50க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் தருகின்றன. இதில் சேர +2வில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில பல்கலைக்கழகங்கள் இதற்காக நுழைவுத் தேர்வையும் நடத்துகின்றன. அகில இந்திய அளவில் நடத்தப்படும் சட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் ஆங்கிலம், கணிதம், பொது அறிவு, சட்டத் திறன் போன்ற பகுதிகளில் கேள்விகள் இடம் பெறுகின்றன. பி.ஏ., பி.எல்., முடித்தபின்பு கார்ப்பரேட் லா படிக்கும் போது பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சியைப் பெற வேண்டும். கார்ப்பரேட் லா பிரிவில் டிப்ளமோ மற்றும் பட்ட மேற்படிப்புகளும் உள்ளன. துறை வாய்ப்பு எப்படி? இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி காரணமாக இப் படிப்புக்கு இன்று நல்ல தேவையிருக்கிறது. வேகமாக வளர்ச்சி காணும் நிறுவனங்கள் பெரிய கார்ப்பரேட் ஜாம்பவான்களாக மாறுவதால் அவற்றின் பணிகளில் கார்ப்பரேட் லா ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிக மூலதனத்தைப் பங்குச் சந்தையில் போடுவதும் அதிகரிக்கும் பொருளாதார நடவடிக்கைகளும் இத் துறை வளர்ச்சிக்கு ஆதாரமாக உள்ளன. இந்திய நிறுவனங்களின் வளர்ச்சி காரணமாக அவை பெரும் நிறுவனங்களாக உருவெடுக்கும் போது அவற்றை நிர்வகிக்க கார்ப்பரேட் கவர்னன்ஸ் மற்றும் கார்ப்பரேட் ரீஸ்ட்ரக்சரிங் போன்றவற்றின் தேவை நிச்சயம் அதிகரிக்கும். தாராளமயப் பொருளாதாரமும் கார்ப்பரேட் லா துறையின் தேவையை அதிகரிக்கிறது. இத் துறையில் நிறுவனங்களில் நேரடியாகவோ சட்ட நிறுவனங்களிலோ பணி புரிய வாய்ப்புகள் உள்ளன. கே.பி.எம்.ஜி., ஐ.சி.ஐ.சி.ஐ., பிரைஸ் வாட்டர் ஹவுஸ் போன்ற நிறுவனங்களில் கார்ப்பரேட் லாவுக்கான தனித் துறைகள் இயங்குகின்றன. நிதித் துறை, மேனேஜ்மென்ட், கன்சல்டிங் நிறுவனங்கள் கேம்பஸ் முறையில் கார்ப்பரேட் சட்ட நிபுணர்களை தேர்வு செய்து கொள்கின்றன. வருமானம் போதுமா? இத் துறையில் இயங்கும் நிறுவனங்களைப் பொறுத்து வருமானம் கிடைக்கிறது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் நல்ல சம்பளம் தரப்படுகிறது. ஐ.டி., எப்.எம்.சி.ஜி., நிதி, வங்கி போன்ற துறைகளில் பணியாற்றும் கார்ப்பரேட் லாயர்கள் நல்ல சம்பளம் பெறுகின்றனர். கார்ப்பரேட் லா துறையானது அடிப்படையில் வாணிபச் சட்டங்களில் ஆர்வமுள்ளவருக்கு ஏற்ற துறையாக விளங்குகிறது