வன அதிகாரி பணி
உலகெங்கும் சுற்றுச்சூழல் பாதிப்பும் அதன் விளைவான எதிர்மறை நிகழ்வுகளும் பரவலாக விவாதிக்கப்படுகிறது. இயற்கையான சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் வனத்துறை முக்கியப் பங்காற்று-கிறது. பூமி வெப்பமயமாவது, காடுகளை அழிப்பது, உலக தட்ப வெப்ப நிலை மாற்றங்கள், குடிநீர் தட்டுப்பாடு, இயற்கைப்பேரழிவு ஆகியவற்றுக்கும் காடு வளத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. இது குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகமாக உள்ளது. இயற்கை வனப்பகுதிகள், பறவைகள், விலங்குகள் போன்றவற்றைப் பாதுகாப்பதில் அக்கறையும் ஈடுபாடும் கொண்டவர்களுக்கு வனஅதிகாரி பதவி என்பது மிகப் பொருத்தமானதாக அமையும். ரேஞ்சராகப் பணிபுரியும்ஒருவர் வசம் காட்டின் கட்டுப்பாடு இருப்பதுடன் வனப்பாதுகாப்பும் அவரது பொறுப்பாகவே அமைகிறது. வனப்பகுதியில் நிகழக்கூடிய அனைத்து சூழல்களைப் பற்றிய ஆழமான பயிற்சிகள் இப் பணியில் சேருபவருக்குத் தரப்படுகிறது. வீடு கட்ட உபயோகப்படும் மரம் தயாரித்தல், சிறப்பு முகாம்களை நடத்துவது, களப் பணி, கட்டுமானப் பணி, மரம் நடுவது, நர்சரி மேலாண்மை, மர அறுவை ஆலைகளில் மரப் பொருட்களைப் பாதுகாப்பது, வெளிநாடுகளுக்கு மரப் பொருட்களை ஏற்றுமதி செய்வது, குறியிடுவது மற்றும் மரம் தொடர்பான முதல் நிலைப் பணிகள் போன்றவற்றை மேற்பார்வையிடுபவர் ரேஞ்சர் தான்.இப் பணிகளுக்கான அறிவிப்பிற்கு விண்ணப்பிப்பவரின் வயதுத் தகுதி மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. பொதுவாக 18 முதல் 30 வயதுடையவர் இத் துறையில் சேரலாம். வன அதிகாரியாகப் பணியாற்ற இயற்கை அறிவியல், கணிதம், மண்ணியல், புள்ளியியல், பொறியியல் அல்லது விவசாயத்தில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்திருப்பது அவசியத் தேவையாக அமைகிறது. வன அதிகாரியாகப் பணியாற்ற போட்டித் தேர்வு முறையே பின்பற்றப்படுகிறது. இத் தேர்வில் பொது அறிவு, ஆங்கிலம் ஆகியவைகட்டாயப் பாடங்களாக அமைகின்றன. சில மாநிலங்கள் விருப்புக்கேற்ப 2 பாடங்களில் தேர்வு எழுதும் முறையை பின்பற்றுகின்றன. வனத் துறையினர் நடத்தும் தேர்ச்சி முறை 2 கட்டமாக நடத்தப்படுகிறது. முதலில் போட்டித் தேர்வும் அதன் பின் உடல் தகுதிக்கான தேர்வும் நடத்தப்படுகிறது.அறிவுத் திறனுடன், உடற் தகுதியும் கட்டாயம் தேவைப்படும் துறை இது. போட்டித் தேர்வானது பொது அறிவு, ஆங்கிலம், கணிதம் ஆகிய பகுதிகளில் தலா 50 கேள்விகளுடன் 150 நிமிடத் தேர்வாக நடத்தப்படுகிறது. இவற்றில் அனைத்துக் கேள்விகளுக்கும் சமமான மதிப்பெண்கள் தரப்படுகிறது. போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மட்டும் 2ம் கட்டத் தேர்வான உடற்தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்கள் குறைந்த பட்சம் 163 செ.மீ., உயரமும் 84 செ.மீட்டர் மார்பளவும் விரிந்த நிலையில் 5 செ.மீ., அளவும் அதிகம் பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கு இந்த அளவுகள் முறையே 150, 79, +5 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து ஆண்கள் 4 மணி நேர நடையில் 25 கி.மீ., தூரத்தையும் பெண்கள் இதே கால அளவில் 16 கி.மீ., தூரம் நடப்பதும் உடற்தகுதித் தேர்வின் ஒரு பகுதியாக உள்ளது. நாம் ஏற்கனவே கூறியபடி இத் துறையில் பணியாற்ற மன விழிப்புணர்வுடன், திடமான உடற்தகுதியும் தேவைப்படும். சவால்கள் பலவற்றையும் உள்ளடக்கிய துறையாகும் இது. இப் பணியில் ரேஞ்சராகப் பணியைத் தொடங்கினாலும் காடுகளைப் பாதுகாக்கும் உதவியாளராகப் பணி முன்னேற்றம் பெறும் வாய்ப்புகள் உள்ளன. நகர்ப்புற வாழ்க்கையில் இருந்து விலகிய கட்டுப்பாடான வாழ்க்கை முறையை மேற் கொள்ள விரும்பும் இயற்கை ரசனையாளர்களுக்கு மன நிறைவுடன் பணியாற்றும் வாய்ப்புகளை இத் துறை தருகிறது. எங்கு படிப்பது? : வனத் துறை அதிகாரியாகப் பணியாற்ற விரும்புபவர்கள் இந்தியாவின் பல்வேறு விவசாயப் பல்கலைக்கழகங்களின் வாயிலாகத் தரப்படும் படிப்புகளையும் ஆய்வுப் படிப்புகளையும் மேற்கொள்ளலாம்.