ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ.யின் சர்டிபிகேட் படிப்பு
பி.பி.ஓ., கே.பி.ஓ., நிறுவனங்கள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சில்லறை விற்பனை நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள் என பல்வேறு வணிக நிறுவனங்களில் அடிப்படை கணக்கு பதிவியல் முறை கற்றவர்களுக்கான தேவை உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் கணக்கு பதிவியல் நிபுணர்களின் தேவை 10 லட்சமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் மந்தமடைந்திருக்கும் சூழலிலும், நாட்டின் வளர்ச்சி வேகத்தால் இந்த தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. 11வது ஐந்தாண்டு திட்டத்தின்படி நிதித்துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும், 35 லட்சம் முதல் 40 லட்சம் வரை புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த துறையில் வேலைவாய்ப்புகள் மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ., சர்டிபிகேட் இன் அக்கவுன்டிங் டெக்னீஷியன் என்ற புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளது. கணக்குப்பதிவியல் மற்றும் கட்டுப்பாடு நடைமுறையில் தேவையான திறன்களை வழங்கும் வகையில் இந்த படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. கஸ்டம்ஸ் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி ஆவண தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்களில் கணக்கு பதிவியல் பிரிவில் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை சார்ந்த மாணவர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில் இந்த படிப்புகள் அமைந்திருக்கின்றன. இந்த ஓராண்டு படிப்பில் 60 மணி நேர கம்யூட்டர் பயிற்சியும், 15 நாள் சிறப்பு பயிற்சியும், ஆறு மாத செய்முறை பயிற்சியும் வழங்கப்படுகிறது. இந்த படிப்பில் சேர பிளஸ் 2 நிறைவு செய்திருக்க வேண்டும். இதற்கான கட்டணம் 8 ஆயிரத்து 600 ரூபாய். படிப்பை நிறைவு செய்த பின் மாணவர்களுக்கு 7 லட்ச ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.