ஐ.ஐ.டி., யில் சாதிக்கத் துடிக்கும் மாணவர்கள்
ஐ.ஐ.டி., நுழைவுத்தேர்வு உலகிலேயே மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றாக அமைந்துள்ளது. ஏறத்தாழ ஐந்தாயிரம் இடங்களுக்கு ஆண்டுதோறும் இரண்டரை லட்சம் மாணவர்கள் நுழைவுத்தேர்வை எழுதிவருகின்றனர். ஐஐடி நுழைவுத்தேர்வில் வெற்றிபெற விரும்பும் மாணவர்கள், கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களின் அடிப்படை விஷயங்களை நன்றாக தெரிந்து கொண்டு அவற்றை பயன்பாட்டுக்கான விஷயங்களில் பொருத்திப்பார்ப் பதற்கான நுண்ணறிவினை பெற்றிருக்க வேண்டும். ஒரு தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் அதற்கு அடுத்த தேர்வுகளில் கேட்கப்படுவதில்லை என்பதால் ஆரம்பத்திலிருந்தே அனைத்து பாடங்களையும் மாணவர்கள் நுணுக்கமாக கற்றுதெளிவுபெறவேண்டியது அவசியமான ஒன்றாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி.,க்களில் சிவில், கம்ப்யூட்டர் சயன்ஸ், ஏரோஸ்பேஸ், கெமிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஜினியரிங் பிசிக்ஸ், மெக்கானிக்கல், மெட்டலர்ஜிக்கல் அண்டு மெட்டீரியல் சயன்ஸ், புரடக்ஷன் அண்டு இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ், மேத்தமேட்டிக்ஸ் அண்டு கம்ப்யூட்டிங், அக்ரிகல்சுரல் அண்டு புட் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங், ஓசன் இன்ஜினியரிங் அண்டு நேவல் ஆர்க்கிடெக்ச்சர், மைனிங், பல்ப் அண்டு பேப்பர் இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நான்கு ஆண்டு பிடெக் படிப்பினை படிக்கலாம். இது தவிர பி.டெக், பி.ஆர்க், எம்.டெக்., ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு எம்.எஸ்சி., படிப்புகளும் உள்ளன. ஐ.ஐ.டி., நுழைவுத்தேர்வுகளில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஒரே நாளில் இரண்டு கட்டமாக இரண்டு அல்லது மூன்று மணிநேரத் தேர்வு நடத்தப்படும். காலையில் கணிதம், இயற்பியல், வேதியல் பாடங்களை சேர்த்து ஒரு தேர்வும், பிற்பகலில் இதே பாடங்களை அடிப்படையாக கொண்டு மற்றொரு தேர்வும் நடத்தப்படும். இரண்டுமே அப்ஜெக்ட்டிவ் முறையில் கேட்கப்பட்டிருக்கும். தவறான விடைகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும். யூகத்தின் அடிப்படையில் விடைகளை எழுத நினைப்பவர்கள் இதனால் சிக்கலில் மாட்டிக் கொள்வர். சென்னை ஐ.ஐ.டி.,யில் கலைப்படிப்பு மாணவர்களுக்காக ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த கலைப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. டெவலப்மென்ட் ஸ்டடீஸ், பொருளாதாரம், ஆங்கிலப் பாடப் பிரிவுகளில் எம்.ஏ., படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான படிப்புக்காலம் ஐந்து ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளஸ் டூ படித்த மாணவர்கள் இப்படிப்புகளில் சேரலாம். இதற்காக தனி நுழைவுத் தேர்வு சென்னை, ஐதராபாத், கோல்கட்டா, மும்பை, டில்லி ஆகிய இடங்களில் நடைபெறும். இதற்கான அறிவிப்பு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டு மார்ச் மாதத்தில் நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படும். மூன்று மணிநேரம் நடைபெறும் நுழைவுத் தேர்வில் ஆங்கில காம்ப்ரஹென்சன் ஸ்கில், அனலிட்டிக்கல் அண்டு குவான்டிடேட்டிட் எபிலிட்டி அண்டு ஜெனரல் நாலேஜ் ஆகியவற்றில் அப்ஜெக்டிவ் முறையில் வினாக்கள் கேட்கப்படும். ஐஐடி.,க்கள் இந்தியாவில் மும்பை, டில்லி, கவுகாத்தி, கான்பூர், கரக்பூர், சென்னை, ரூர்க்கி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.பல ஐ.ஐ.டி., கோச்சிங் மையங்கள் மாணவர்களை சேர்த்துக் கொண்டு பயிற்சி அளிக்க தனி நுழைவுத்தேர்வு நடத்துகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா என்ற ஊரில் உள்ள மூலை முடுக்கு களில் எல்லாம் ஐ.ஐ.டி.,நுழைவுத்தேர்வுக்கான கோச்சிங் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. உலக அளவில் ஏராளமான வேலை வாய்ப்புகளை ஐ.ஐ.டி.,படிப்பின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்பதால் எண்ணற்ற மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் சேர்ந்து படிப்பதை தங்கள் லட்சியமாகவும், வெளிநாடுகளில் வேலை பார்க்க வேண்டும் என்ற எதிர்கால கனவுக்கு அஸ்திவாரமாகவும் கருதி கடின முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கூடுதல் விபரங்களுக்கு: http://jee.iitd.ac.in