வேலை தரும் இன்டர்ன்ஷிப்!
ஐ.டி., துறை வேலை வாய்ப்புகள் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், 'கோர் இன்ஜினியரிங்' துறைகளில் தான் வேலை பாதுகாப்பு அதிகமாக உள்ளதை மாணவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். நிலையான மற்றும் தொடர் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.நம் நாட்டில் பெரும்பாலான மாணவர்கள், பொருளாதார ரீதியாக நடுத்தர குடும்ப சூழலை சார்ந்தவராக உள்ள நிலையில், சிறந்த வேலைவாய்ப்பை வழங்கும் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்யும் அவர்களது நோக்கம் சரியானது தான். இத்தருணத்தில், கல்லூரி பாடத்திட்டத்திற்கும், தொழில்நிறுவனங்களின் எதிர்பார்ப்பிற்கும் பெரிய இடைவெளி உள்ளதை ஒப்புக்கொண்டாக வேண்டும். அத்தகைய இடைவெளியை குறைக்க, வேலை வாய்ப்பு சார்ந்த சிறப்பு பயிற்சிகளை கல்வி நிறுவனங்களே வழங்குவது இன்றைய காலத்தில் இன்றியமையாத ஒன்று.சிறந்த வேலைவாய்ப்பை பெறுவதில் 'இன்டர்ன்ஷிப்' மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 'இன்டர்ன்ஷிப்' பயிற்சி மேற்கொள்ளும் தொழில் நிறுவனத்திலேயே வேலை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆகையால் தான், துறை சார்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களில் 3 மாதங்கள் 'இன்டர்ன்ஷிப்' மேற்கொள்ள எங்கள் மாணவர்களுக்கு தேவையான உதவுகளை செய்கிறோம்.நாம் எந்த துறையை சார்ந்தவராக இருந்தாலும், அத்துறையின் மாற்றத்திற்கு ஏற்ப நம்மை மெருகேற்றிக்கொண்டால் மட்டுமே முன்னேற்றம் சாத்தியமாகும். உலகமே இன்று கையடக்க கருவியில் சுருங்கி விட்ட நிலையில், அவற்றால் சாதகமும் உண்டு; பாதகமும் உண்டு. நவீன தொழில்நுட்பங்களை முன்னேற்றத்திற்கும், தொடர் மேம்பாட்டிற்கும் பயன்படுத்திக்கொள்வதே புத்திசாலித்தனம்.அத்தகைய நவீன தொழில்நுட்பங்களை கற்பிப்பதோடும், சிறந்த வேலை வாய்ப்பை பெற்றுத்தருவதோடும் கல்வி நிறுவனங்களின் பணி நிறைவடைந்துவிடுவது இல்லை. உணர்வு ரீதியாகவும் மாணவ, மாணவிகளை சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாக மாற்றுவதும் கல்வி நிறுவனங்களின் கடமையே. அதனை உணர்ந்து செயல்படுவதால் தான், எங்கள் கல்வி நிறுவனம் மருத்துவமனைகளின் தேவைக்கும் அதிகமாகவே ரத்ததானம் வழங்குதல், அரசு பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பயிற்சி மற்றும் சாதனங்களை இலவசமாக வழங்குதல் உட்பட பல்வேறு சமுதாய பணிகளை மேற்கொள்ளும் மாணவர்களை பெற்ற கல்வி நிறுவனமாக விளங்குகிறது.மேலும், ஆராய்ச்சி இதழ்களில் கட்டுரைகள் வெளியிடுதல், மாணவர்களின் உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணுதல், துறை சார்ந்த திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி வழங்குதல் போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம். இத்தகைய முன்னெடுப்புகளில் எங்களது பேராசிரியர்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. எவர் ஒருவரது வாழ்க்கையையே மாற்றக்கூடியே சக்தி கல்விக்கு மட்டுமே உண்டு. அதே தருணம், கல்வி என்பது மதிப்பெண் சார்ந்தது மட்டும் அல்ல. நாம் சார்ந்த சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் அது பயனுள்ளதாக அமைய வேண்டும். ஒரு மீனவர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பெற்ற கல்வியை நாட்டிற்கே பயனுள்ளதாக மாற்றியதாலேயே, நாட்டின் உயரிய குடியரசு தலைவர் பொறுப்பை அலங்கரித்தார், டாக்டர் அப்துல் கலாம்.-லாவண்யா கதிர், செயலாளர், கதிர் கல்வி நிறுவனங்கள், கோவை.