உள்ளூர் செய்திகள்

தொலைநிலைக் கல்வியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

தொலைநிலைக் கல்வியை மேற்கொள்ளும் ஒருவருக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன என்பதை மறுக்க முடியாது. அது, படிப்பில், வித்தியாசமான அனுபவத்தைக் கொண்டு வருகிறது. இப்படிப்பில் சேரும் ஒருவர், ஐயோ, தனக்கு இடம் கிடைக்குமா? என்று கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், இப்படிப்பிற்கு இவ்வளவு இடங்கள்தான் காலியாக இருக்கின்றன, எனவே இத்தனை நபர்கள்தான் சேர முடியும் என்ற நெருக்கடி இதில் ஏற்படாது. பல படிப்பில் எத்தனை நபர்கள் வேண்டுமானாலும் சேரலாம். ஏற்கனவே பணியில் இருப்பவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் பல்வேறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நபர்கள், நேரடியாக சென்று படிக்க இயலாத பொருளாதார சூழலில் மாட்டிக் கொண்டவர்கள், நேரடியாக சென்று படிக்க விரும்பாதவர்கள் ஆகியோருக்கு தொலைநிலைப் படிப்பு ஏற்றது. தனது படிப்பில் இலகுத்தன்மை வேண்டுமென விரும்புவோருக்கும் இப்படிப்பு ஏற்றதாக உள்ளது. ஏனெனில், பலருக்கு தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு கல்லூரிக்கு சென்று, வகுப்புகளில் கட்டாயமாக கலந்துகொண்டு, குறிப்பிட்ட நேரத்திற்கு புறப்பட்டு வீட்டிற்கு வருவதற்கு விருப்பம் இருப்பதில்லை. அவர்கள், தாங்கள் நினைத்த நேரத்தில் வீட்டில் அமர்ந்து படிப்பதையே விரும்புகிறார்கள். மேலும், தொலைநிலைக் கல்வியில் வசூலிக்கப்படும் கட்டணம், பணிக்கு செல்லும் நபர்களால் சமாளிக்கக் கூடிய ஒன்றாகவே உள்ளது. நேரடியாக சென்று படிக்கையில், தங்களுக்கான கல்வி மற்றும் இதர செலவினங்களுக்கு இதர நபர்களை நம்பியிருக்க வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால், பணி செய்துகொண்டே தொலைநிலைக் கல்வி கற்கும்போது, தங்களுக்கான செலவினங்களுக்கு பிறரை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட காலத்தில் பட்டமும் பெற்று விடலாம். பள்ளிப் படிப்பை நிறைவு செய்யாதவர்களுக்காக... சிலர் பல்வேறான காரணங்களால் 10 மற்றும் 12ம் வகுப்புகளை பூர்த்திசெய்ய முடியாமல் போகலாம். அதுபோன்ற நபர்கள் சிலருக்கு, பட்டப் படிப்பை முடித்து, தானும் ஒரு பட்டதாரி ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதுபோன்ற நிலையில் இருக்கும் 18 வயது பூர்த்தியடைந்த நபர்களுக்கு, இக்னோ வழங்கும் Bachelor Preparatory Programme(BPP) நல்வாய்ப்பை வழங்குகிறது. இதன்மூலம் அவர்கள் உயர்கல்வி வட்டத்தில் நுழைய முடியும். தேவையான கல்வி உபகரணங்கள் இன்றைய உலகம் இண்டர்நெட் உலகம். நமக்குத் தேவையான அனைத்தும் இணையத்தில் கிடைக்கின்றன எனும்போது, கல்வி உபகரணங்களுக்கு மட்டும் பஞ்சம் வந்துவிடுமா என்ன? தொலைநிலைக் கல்வி முறையில் படிக்கும் ஒருவர், தனக்கு தேவையான கல்வி உபகரணங்களை இணையத்தில் பெற்று பயனடைய முடியும். உதாரணமாக, ஸ்டான்போர்டு, ஹார்வர்டு மற்றும் வார்டன் ஆகிய உலகப் புகழ்பெற்ற பல்கலைகளின் பாட உபகரணங்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன. இதன்மூலம், தொலைநிலைக் கல்விக்கும், நேரடி கல்விக்கும் பெரிய வித்தியாசமில்லை என்றாகிறது. சம அந்தஸ்தா? நேரடி கல்வியும்(Regular mode), தொலைநிலைக் கல்வியும் அரசு விதிமுறைப்படி சம அந்தஸ்து உள்ளவையே. (முறையாக பள்ளிப் படிப்பை நிறைவுசெய்து மேற்கொள்ளப்பட்ட தொலைநிலை பட்டப் படிப்பே அந்தஸ்து உள்ளது என்பதை நினைவில் கொள்க). ஆனால், நடைமுறையில் பல இடங்களில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போது, தொலைநிலைக் கல்வி முறையில் படித்தவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். ஏனெனில், பல கல்வி நிறுவனங்கள், தொலைநிலைக் கல்வி முறையில் படித்தவர்களை, ஆசிரியர் பணிக்கு தேர்வுசெய்ய விரும்புவதில்லை. நேரடியாக படித்த ஒரு போட்டியாளரை எதிர்கொள்ளும்போது, தொலைநிலைக் கல்வியில் படித்தவர், நிச்சயமாக புறக்கணிக்கப்படுகிறார். சில கல்வி நிறுவனங்கள், ஆசிரியர் தேவை என்று விளம்பரம் கொடுக்கும்போதே, தொலைநிலைக் கல்வியில் படித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் குறிப்பிடுகின்றன. கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல, சில தொழில் நிறுவனங்களும் இத்தகைய அறிவிப்புகளை வெளியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சிலபேர், தொலைநிலைக் கல்வியில் படித்தார்கள் என்பதற்காக, சமயத்தில், அரசுப் பணி வாய்ப்புகளையே தவற விடுகின்றனர். ஆனால், பல நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும், தொலைநிலைக் கல்வி என்பது, இன்றைய வாழ்க்கை முறையில் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. அதை மேற்கொள்ளும் நபர்களும், நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறார்கள். திறமையும், தைரியமும், சாதுர்யமும் உள்ள நபர்களுக்கு தொலைநிலைக் கல்வி ஒரு தடையாக இருப்பதில்லை. மேலும், கார்பரேட் உலகில், ஒருவர் கற்ற உயர்கல்வி, தொலைநிலை முறையிலானதா? அல்லது நேரடி முறையிலானதா? என்பதைப் பற்றியெல்லாம் நிறுவனங்கள் அதிகம் கவலைப்படுவதில்லை. அந்தப் படிப்பு அங்கீகரிக்கப்பட்டதாகவும், அதை முடித்தவர்கள், தகுதியும், திறமையும் உடையவர்களாகவும் இருந்தால் மட்டும் போதும் என்பதே பெரும்பாலான நிறுவனங்களின் எதிர்பார்ப்பு. எனவே, நேரடிக் கல்வி முறையில் படிக்க முடியாதவர்கள் மற்றும் படிக்க விரும்பாதவர்கள், தங்களுக்கான அங்கீகாரம் பற்றி பெரியளவில் கவலைப்படத் தேவையில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !