உடல் நலத்தில் அக்கறை காட்டும் பொறியியல்
பொறியியல் துறை என்றாலே இயந்திரங்களுடன் இணைந்து மட்டுமே பணியாற்றும் நிலை உள்ளது. ஆனால் நவீன தொழில்நுட்ப இயந்திரங்களுடனும், நலம் பாதிக்கப்பட்ட மனிதர்களுடன் அன்பாகவும் பழகக்கூடிய ஒரு தொழில்துறை என்றால் அது பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறைதான். மருத்துவம் சார்ந்த துறை என்பதால் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படக்கூடிய துரையாக உள்ளது. புதிது புதிதாக வரக்கூடிய நோய்களைக் கண்டறிய, மருத்துவ உபகரணங்களை மட்டுமே மருத்துவமனைகள் பெரிதும் நம்பியுள்ளன. ஆய்வகங்கள் முதற்கொண்டு ஒவ்வொரு நோயின் தன்மையை அறிந்துகொள்வதிலும், அறுவை சிகிச்சைக்கு பெரிதும் உதவுவதிலும் மருத்துவ உபகரணங்கள் பெரும் பங்காற்றி வருகின்றது. மக்கள் தொகை, சுகாதாரம், வாழ்க்கை முறை போன்றவற்றின் காரணமாக நோய்களின் எண்ணிக்கையும், நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மருத்துவ உபகரணங்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இப்படி சிறப்பாக வளர்ந்து வரும் துறையில் உங்கள் பங்களிப்பையும் செலுத்த விரும்புகிறீர்களா? கல்வித் தகுதி பொறியியல் இளநிலையில் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் முதுநிலை பொறியியலில் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் அல்லது பயோமெடிக்கல் அறிவியலில் முதுநிலை பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது இளநிலை படிப்பிற்கு பின்னர் அடிப்படை மருத்துவ ஆய்வு படிப்பை படித்திருக்க வேண்டும். வேலை வாய்ப்புகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் மருந்துகளுக்கான மாபெரும் சந்தையாக இந்தியா விளங்குகிறது. மருத்துவ சுற்றுலாவுக்காக இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. உயிர்மருத்துவ பொறியாளர்களுக்கு மருந்து நிறுவனங்கள், மருத்துவ தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆய்வுக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அதிகமான வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. கல்வித் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆசிரியப் பணி காத்திருக்கிறது. தேவையான திறன்கள் உடல் சம்பந்தமான, உயிர் சம்பந்தமான பணி என்பதால் மிகுந்த அக்கறை தேவை. பொறியியல் பணியாக இருந்தாலும், மக்களோடு அதுவும் உடல் நலம் பாதிக்கப்பட்ட மக்களோடுதான் பணி என்பதால் நிதானமும், இரக்க குணமும் அவசியம். பிற இடத்தில் பணியில் சேர்வதை விட சுயமாக தொழில் தொடங்குவதையே பலரும் விரும்புகின்றனர். எனவே அதற்கேற்ற வகையில் தங்களை தாயார்படுத்துவது எதிர்கால முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும். சிறந்த கல்வி நிறுவனங்களில் சில ஆல் இந்தியா இன்ஸ்டிடீயூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (ஏய்ம்ஸ்), புது டில்லி. ஐ.ஐ.டி. (மும்பை, காரக்பூர்), இந்தியா.அண்ணா பல்கலைக்கழகம், சென்னை.ஜான் ஹோப்கின்ஸ் யூனிவர்சிட்டி, அமெரிக்கா.யூனிவர்சிட்டி ஆஃப் கிளாக்சோவ், இங்கிலாந்து.