நாட்டின் வளர்ச்சிக்கான ஆதாரம் கல்வி!
நாட்டின் தேவைக்கு ஏற்ப தேசிய கல்விக் கொள்கை - 2022யை பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அமல்படுத்திய மத்திய அரசின் செயல் மிகவும் பாராட்டுதலுக்குரியது. குறிப்பாக, ஏ.பி.சி., எனும் 'அகடமிக் பேங்க் ஆப் கிரெடிட்ஸ்' முறை சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. என்.இ.பி., சிறப்புகள்உயர்கல்வி பயிலும் மாணவர்கள், பொருளாதார குறைவு அல்லது தனிப்பட்ட பல்வேறு காரணங்களால் சிறிது காலம் இடைவெளி எடுத்துக்கொள்ள, புதிய தேசிய கல்விக் கொள்கை அங்கீகரிக்கிறது. சான்றிதழ் அல்லது டிப்ளமாவிற்கான அங்கீகாரத்துடன் அவர்கள் சென்றாலும், பிறகு அதே கல்வி நிறுவனத்திலோ அல்லது வேறு கல்வி நிறுவனத்திலோ இடைநின்ற இடத்தில் இருந்தே மீண்டும் உயர்கல்வியை தொடர வழிவகுக்கிறது. இதனால், அவர்கள் மறுபடியும் ஆரம்பத்தில் இருந்து கற்கவேண்டிய அவசியமும், காலம் மற்றும் பண விரயம் செய்ய வேண்டிய கட்டாயமும் இல்லை.இன்றைய காலத்திற்கு மிகவும் அவசியமான புத்தாக்க சிந்தனை, ஆராய்ச்சி, பல்துறை கல்வி அணுகுமுறை, புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உயிரியல், இசை, லிபரல் ஆர்ட்ஸ், இன்ஜினியரிங் என பலதரப்பட்ட துறை சார்ந்த கல்வியை ஒரு மாணவரால் பெற முடிகிறது. இன்டர்ன்ஷிப், வேலை வாய்ப்பு ஆகியற்றிற்காக மட்டும் ஒரு பல்கலைக்கழகம் தொழில் நிறுவனங்களுக்கு செல்லாமல், பாடத்திட்டத்தை வகுப்பதில் இருந்து, கல்வியை வழங்குதல், மேம்படுத்துதல் என பல அம்சங்களில் இணைந்து செயல்புரியவும் வலியுறுத்தப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் முக்கிய பணியான புதிய அறிவை வழங்குவதல் புதிய கல்விக் கொள்கையால் சாத்தியமாகிறது.ஆன்லைன் கல்விதொழில்நுட்பத்தை கல்வியில் ஒருங்கிணைத்தலும் அதிக மக்கள் தொகையை கொண்ட நம் நாட்டிற்கு மிகவும் அவசியமாகிறது. ஆன்லைன் வாயிலான கல்விக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பது கல்வியில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சமீபகாலமாக, புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையும் கணிசமாக அதிகரித்துள்ளது. கல்வி கற்கும் சூழல் வெகுவாக மேம்பட்டு வரும் நிலையில், இத்தகைய மாற்றங்கள் இந்தியாவை மேலும் ஒரு வலிமையான நாடாக மட்டுமின்றி, அற்புதமான மனித வளம் நிறைந்த நாடாகவும் தனித்துவிளங்கும் என்பதில் சந்தேகமில்லை.ஆன்லைன் வாயிலான கல்வியால் தரம் குறைவதற்கான வாய்ப்பு இல்லை. அனைத்து புகழ்பெற்ற வெளிநாட்டு கல்வி நிறுவனங்களும் ஆன்லைன் வாயிலான கல்வியை திறம்பட வழங்குகின்றன. தொழில்நுட்பம் வாயிலான கல்வி, வெளிப்படத்தன்மை, தரமான கற்றல், சாதகமான விளைவு, வேலை வாய்ப்பு அனைத்தையும் சாத்தியமாக்கும். வகுப்பறையில் தான் தரமான கல்வி கிடைக்கும் என்ற எண்ணம் நிச்சயம் மாறும். கல்வி என்பது வேலை வாய்ப்பிற்கான கருவியாக மட்டுமே கருதப்படக்கூடாது. தரமான கல்வி வழங்கப்படும்பட்சத்தில் வேலை வாய்ப்பை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. அதேபோல், கல்வி என்பது லாபம் தரும் வியாபாரமாகவும் பார்க்கப்படக் கூடாது. நாட்டின் வளர்ச்சிக்கான ஆதாரமாக கருதப்பட வேண்டும். - குன்வர் சேகர் விஜேந்திரா, வேந்தர், சோபித் பல்கலைக்கழகம், மீரட், உ.பி.,mail@shobhituniversity.ac.in