பொறியியல் படிப்பில் சேரும் முறையை அறிவோமா?
மாணவர் சமூகத்தின் மத்தியில் பரவலான பிரபலத்தைப் பெற்றிருக்கும் பொறியியல் படிப்பில் சேரும் முறைகள் குறித்து தெளிவாக அறிந்துகொள்வது அவசியம். இந்திய சமூகத்தின் ஒரு பொது ஆர்வமாக மாறிப்போன பொறியியல் படிப்பில் ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் சேர்கிறார்கள். ஆனால், இன்றும்கூட அப்படிப்பில் சேர்வதற்கான தகுதிநிலைகள் குறித்து சிலர் முழுவதும் அறியாமலேயே இருக்கிறார்கள். அவர்களுக்கானதே இக்கட்டுரை. தகுதி ஏஐஇஇஇ மற்றும் பிற பொறியியல் நுழைவுத் தேர்வுக்கான தகுதிகள்; * பள்ளி மேல்நிலைப் படிப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டும். * குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் SC/ST/OBC/PH பிரிவு மாணவர்களுக்கு 40% போதுமானது. * மாணவர்கள், 17-25 வயதுக்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். SC/ST/PH பிரிவினருக்கு 5 வருட வயது சலுகை உண்டு. நுழைவுத்தேர்வு AIEEE, IIT-JEE, BITSAT, MHTCET, UPSEE போன்ற சில தேர்வுகள் முக்கியமானவை. இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்கள் தொடர்பாக, 12ம் வகுப்பு வகைமுறையின்(pattern) அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். கட்டணம் படிக்கும் கல்வி நிறுவனத்தைப் பொறுத்து, ஒரு வருடத்திற்கு, ரூ.50,000 முதல் ரூ.3.5 லட்சம் வரை செலவாகிறது. தயாராதல் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் செயல்முறையானது, அதிக நேரத்தையும், அதிக அர்ப்பணிப்பையும் உள்ளடக்கிய ஒன்று. சரியான திட்டமிடுதல் இல்லையெனில் தோல்வியே மிஞ்சம். நீங்கள் எழுதும் தேர்வின் பாடத்திட்டம் மற்றும் வகைமுறையை(pattern) நன்கு அறிந்துகொள்வது முக்கியம். அடிப்படையான விஷயங்களில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். எந்தமாதிரியான புத்தகங்கள் மிகவும் பயனுள்ளவை என்பதை உங்களின் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். பழைய கேள்வித்தாள்களை வைத்து பயிற்சி எடுக்கலாம். இதன்மூலம் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எந்தவகை தலைப்புகளில் நீங்கள் தெளிவாக இருக்கிறீர்கள் மற்றும் எவற்றில் நீங்கள் பலவீனமாக இருக்கிறீர்கள் என்பதை வகைப்படுத்தி, அதற்கேற்ப, சம்பந்தப்பட்ட பாடங்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். தேர்வெழுதுகையில், கடினமான கேள்விகளை எழுதுவதற்கு எவ்வளவு நேரம் மற்றும் எளிதான கேள்விகளை எழுதுவதற்கு எவ்வளவு நேரம் என்பதை திட்டமிட்டுக் கொள்ளவும். எளிதான கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்குமாறு பல ஆசிரியர்கள் கூறுவது வழக்கம். திறந்த மனதுடன் தேர்வுக்கு செல்லவும். தேர்வில் விரைவாக சிந்தித்து எழுதக்கூடிய வகையிலும் கேள்விகள் கேட்கப்படும். உங்களின் மீது அழுத்தத்தையோ, பதட்டத்தையோ ஏற்றுக்கொள்ளாதீர்கள். உங்களின் பணியை சிறிதுசிறிதாகப் பிரித்து, சரியான நேரத்தில் அவற்றை முழுவதும் முடிக்கும் விதத்தில் தயார்செய்து கொள்ளுங்கள்.