உள்ளூர் செய்திகள்

இந்தியாவில் ஆன்த்ரோபாலஜி படிப்பிற்கான சவால்கள்

சுவாரஸ்யமும், அற்புதமும் நிறைந்த படிப்பாக ஆன்த்ரோபாலஜி இருந்தாலும், இந்தியாவில் அப்படிப்பிற்கான நிலை சிறப்பாக இல்லை. பல சவால்களைக் கடந்தே Anthropology மாணவர்கள் முன்னேற வேண்டியுள்ளது. அந்த சவால்களைப் பற்றி தற்போது விரிவாக காணலாம். பாடத்திட்ட சிக்கல்கள் இந்தியாவைப் பொறுத்தவரை, Anthropology பாடத்திட்டத்தில் புதுமையான அம்சங்கள் வேண்டும் என்ற கோரிக்கை நெடுநாட்களாக இருக்கிறது. மத்திய பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் 15 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் புனரமைப்பு செய்யப்பட்டதாக அத்துறை பேராசிரியர் ஒருவர் கூறுகிறார். பொதுவாகவே, Anthropology பாடத்திட்டத்தின் புத்தாக்க முயற்சிகள் விரைவாக நடைபெறுவதில்லை என்றே சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் கூறுகின்றன. மேற்கு நாடுகளில் கற்பிக்கப்படுவதுபோல் தரமான பாடத்திட்டங்கள் நம் Anthropology துறையில் கற்பிக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு, இல்லை என்றே அத்துறை ஆசிரியர்கள் பதிலளிக்கின்றனர். அமெரிக்காவில் கற்பிக்கப்படும் Anthropology பாடத்திட்டத்தோடு ஒப்பிடுகையில், சுமார் 30 ஆண்டுகள் பின்தங்கியதாக நமது பாடத்திட்டம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். மேலும், 5 வருடங்களுக்கு ஒருமுறை பாடத்திட்டங்கள் புனரமைப்பு செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். Anthropology  படிக்கும் மாணவர்கள், பாடத்திட்டம் என்ற விஷயத்தைத் தாண்டி, தங்களின் அறிவை மேம்படுத்திக் கொள்ள என்னென்ன அம்சங்கள் உதவுமோ, அவற்றை நோக்கி செல்ல வேண்டும். பாட உள்ளடக்கத்தை அவ்வப்போது சரிசெய்வது பேராசிரியர்களின் கையில்தான் உள்ளது. மாணவர்கள் அதிர்ஷ்டமுடையவர்களாக இருந்தால், அவர்களுக்கு புதிய பாடத்திட்டம் கிடைக்கும். இல்லையெனில், பழைய பாடத்திட்டங்களே தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். மேலும், இந்தியாவில் இப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களில் கணிசமான பேர், ஆய்வக வசதிகள் மற்றும் அருங்காட்சியகம் போன்ற முக்கியமான தேவைகளைக்கூட சரியாகப் பெற முடியாதவர்களாக இருக்கிறார்கள். தடயவியல் ஆய்வக வசதிகள் முழுமையாக இல்லையெனில், பிஎச்.டி மேற்கொள்ளும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதைத்தவிர, பல கல்வி நிறுவனங்களில் இணையதள வசதிகளும் முறையாக இருப்பதில்லை. இந்தியாவின் பல கல்வி நிலையங்களில், சமூக-கலாச்சாரம், உயிரியல், பழங்கால Anthropology  மற்றும் வரலாற்றுக்கு முந்தைய தொல்லியல் போன்ற Anthropology பாடத்தின் உட்கூறுகள் மேலோட்டமாகவே கற்பிக்கப்படுகின்றன. இந்தியாவின் பல்கலைகள், மேம்பட்டுவரும் Anthropology  உப துறைகளின் கூறுகளை இன்னும் உள்வாங்க வேண்டியுள்ளது. கார்பொரேட் Anthropology  என்ற ஒரு புதிய பிரிவும் தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது. மேலும், இப்படிப்பில், மாணவர் பரிமாற்ற நடவடிக்கைகளும் இன்னும் தொடங்கப்படவில்லை. இத்துறைக்கான போதுமான நிதி ஒதுக்காமை நிலைமையை பெரிதும் மோசமாக்குகிறது. இளநிலை மற்றும் முதுநிலை அளவில், களப்பணி செய்வதற்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. இத்துறையில் UGC-NET தேறினால் மட்டுமே, மாதம் ரூ.16,000 வழங்கப்படுகிறது. இந்தத் தொகையானது 2 வருடங்களுக்குப் பிறகு, ரூ.18,000 என்ற அளவில் உயர்த்தப்படும். இதைத்தவிர, எதிர்கால உத்தேச செலவுகளுக்கு ரூ.20,000 ஒதுக்கப்படுகிறது. மேலும், DST, ICSSR, ICHR, CSIR and ICMR, Ministry of Welfare and Ministry of Tribal Affairs போன்ற மையங்களிலிருந்தும் உதவித்தொகைகள் கிடைக்கின்றன. வாய்ப்புகள் மற்றும் முயற்சிகள் Anthropology  படிப்பின் நிலை, இந்தியாவைப் பொறுத்தவரை, தடுமாற்றமாக தெரியலாம். ஆனால் ஆர்வமுள்ள மாணவர்கள் எதைப் பற்றியும் கவலைப்பட அவசியமில்லை. அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, சமூக-கலாச்சாரத் துறையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதேசமயம், ஒவ்வொரு கல்வி நிறுவனமும், ஒவ்வொரு சிறப்பு பிரிவைக் கொண்டுள்ளன. ஆந்திரா பல்கலையை எடுத்துக்கொண்டால், Genetic demography, Evolutionary genetics and Molecular genetics போன்ற உப பிரிவுகள் அங்கே முக்கியமானவை. அதேசமயத்தில், இந்த Physical Anthropology  பிரிவுக்கு, பஞ்சாபிலுள்ள டார்வாட் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் போன்றவை முக்கியமானவை. சமூக Anthropology  படிக்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு,  ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம், ஒரிசாவின் சம்பல்பூர் பல்கலைக்கழகம், புவனேஷ்வரிலுள்ள உத்கல் பல்கலைக்கழகம், மேற்கு வங்கத்திலுள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகம் மற்றும் ஜார்க்கண்டிலுள்ள ராஞ்சி பல்கலைக்கழகம் போன்றவை முக்கியமானவை. அதேசமயம், Anthropology படிப்பை அமெரிக்காவில் மேற்கொள்ள நீங்கள் விரும்பினால், கொலம்பியா பல்கலை, கலிபோர்னியா பல்கலை போன்றவை பிரபலமானவை. உங்களின் ஆர்வம் mesoamerican archaeology பிரிவில் இருந்தால், Vanderbilt அல்லது Tulane போன்ற பல்கலைகள் சிறந்தவை. இந்தியாவைப் பொறுத்தவரை, Anthropology இளநிலைப் படிப்பில், சராசரியாக 30-35 இடங்கள் உள்ளன. சில கல்லூரிகள், இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன. இந்தப் படிப்பை பெரும்பாலும் மத்திய அல்லது மாநிலப் பல்கலைகளே நடத்துவதால், இப்படிப்பிற்கான கட்டணம் அதிகளவில் இல்லை. இத்துறையில் ஆராய்ச்சியை மேற்கொள்ள யாரேனும் விரும்பினால், உங்களது சுய உந்துதல் மிகவும் முக்கியம். ஏனெனில், வீட்டை விட்டு அதிக நாட்கள் வெளியில் வந்து களப்பணியாற்றி, ஆதாரங்களைத் திரட்டுவதென்பது சவாலானது. மேலும், உங்களுக்கான பொருத்தமான மேற்பார்வையாளரை தேடுவது மிகவும் கடினமானப் பணி. மேலும், ஆராய்ச்சியின்போது கிடைக்கும் உதவித்தொகையும் முறையாக இருப்பதில்லை. தரமற்ற பேராசிரியர்கள் என்பது ஒரு பெரிய சிக்கல். எனவே, திறன்வாய்ந்த பேராசிரியரை மாணவர்கள் அடையாளம் கண்டு, அதன்மூலம் தன்னை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், அங்கிருக்கும் பல பேராசிரியர்கள் பிஎச்.டி முடித்தவர்கள். அவர்கள், ஆராய்ச்சி ஆர்வத்தின் காரணமாகவே, அதை மேற்கொள்கிறார்கள் மற்றும் கற்பிக்கிறார்கள். வளரும் நாடுகளைப் பொறுத்தவரை, Anthropology ஆராய்ச்சியாளர்கள், தங்களது சொந்த நாட்டிற்குள்ளேயே பணிபுரிவதால், சர்வதேச அறிவையும், ஒப்பீட்டுத் திறன் மற்றும் அதன்மூலம் கிடைக்கும் அறிவையும் இழக்கிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இக்காலகட்டத்தில், உலகத்தின் எந்த மூலையும் நீங்கள் கற்பதற்கான இடம்தான். எனவே, Anthropology படித்தால் எதிர்காலம் இருண்டுவிடுமோ என்று பயப்படத் தேவையில்லை. மனித இனத்தைப் பற்றிய மாபெரும் அறிவு ஒளியைக் கொடுக்கும் அந்தப் பாடத்தை, சுய ஆர்வத்துடன் படித்து, ஆராய்ச்சி செய்ய மாணவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !