வளர்ச்சிக்கான தொழில்நுட்பத்தை வடிவமைக்கலாம் வாருங்கள்
ஒரு கண்டுபிடிப்பானது உலகை மேலும் சிறப்புற இயங்க வைப்பதாக இருக்க வேண்டும். அத்தகைய கண்டுபிடிப்புகள் மட்டுமே வருங்காலத்திற்கு அவசியமானதும், அத்தியாவசியமானதுமானதாக இருக்கிறது. எலக்ட்ரானிக் பொருட்கள் இல்லாமல் மனித வாழ்கையே இல்லை என்ற நிலையில் நவீன மனிதனின் வாழக்கை சென்று கொண்டிருக்கிறது. பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் எலக்ட்ரானிக் சாதனங்கள் நாளுக்கு நாள் எடை குறைவானதாக, அளவுகள் சிறியதாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்தை ஏற்படுத்த மூல காரணமாக இருப்பது எலக்ட்ரானிக் பொருட்களுக்குள் இயங்கும் "சிப்"கள் தான். "சிப்"களின் வடிவமைப்புக்கு ஏற்ற வகையில் எலக்ட்ரானிக் பொருட்களின் அளவும், எடையும் மாறுபடுகிறது. ஒரு "சிப்" ஒரு குறிப்பிட்ட எலக்ட்ரானிக் பொருளுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு சாதனங்களுக்கு பயன்படும் வகையில் பன்முகத் தேவைகளை ஈடு செய்யும் பொருளாகவும் இருக்கிறது. வடிவமைப்பு என்பது "சிப்"களுக்கு மட்டுமல்ல, நிறுவன வடிவமைப்பு, இயந்திர வடிவமைப்பு என் எந்தத் துறையிலும் வேலையையும், பணியாற்றும் இடத்தையும், செயலாற்றும் இயந்திரத்தையும் அதிக வேலைத்திறன் உடையதாகவும், செயல்பட எளிதானதாகவும் மாற்றக்கூடியது அந்த இடத்தின், இயந்திரத்தின் வடிவமைப்பே ஆகும். அனைத்துத் துறைகளிலும் அத்தியாவசியமானதாக மாறிவிட்ட வடிவமைப்பு துறை வளர்ந்து வரும் துறையாகும். இந்தத் துறையில் சாதிக்க விரும்புகிறீர்களா? வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் • கடின உழைப்பு என்பதை விட புத்திசாலித்தனம் அதிகம் தேவைப்படும் வேலை இது.• நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு பணிபுரியும் வகையில் உள்ளதால், புதியவற்றை தெரிந்துகொள்ளும் ஆர்வமும் அவற்றை கற்றுக்கொள்ளும் வேகமும் அதிகமாக இருக்க வேண்டும்.• பொறியியல் துறைகளிலேயே மிகவும் சவாலான துறை என்பதால் மிகுந்த ஆர்வம் மற்றும் ஈடுபாடு இருந்தால் தான் வெற்றி பெற முடியும். வேலைவாய்ப்புகள் பெரும்பாலான எலக்ட்ரானிக் பொருட்கள் ஒருங்கிணைந்த சர்க்யூட்களான "சிப்"களை உள்ளடக்கியதாக உள்ளது. சிறு "சிப்"பானது ஒரு மனிதனின் மூளையைப் போன்று செயல்படுகிறது. "சிப்" வடிவமைப்பு துறையானது மாபெரும் வாய்ப்புகளை உள்ளடக்கியதாக உள்ளது. பிற பொறியியல் பணி ஊதியத்தை விட அதிகமான சம்பளம் பெறும் வாய்ப்பு, வடிவமைப்பு துறையில்தான் உள்ளது. கல்வித் தகுதி • இளநிலை பொறியியலில் எலக்ட்ரிகல் / எலக்ட்ரானிக் / சிவில் / மெக்கானிக்கல் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைப் படித்திருக்க வேண்டும். • முதுநிலை பொறியியலில் எலக்ட்ரிகல் / எலக்ட்ரானிக் / சிவில் / மெக்கானிக்கல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைப் படித்திருக்க வேண்டும். அல்லது முதுநிலையில் பொருள் வடிவமைப்பு / தொழிலக வடிவமைப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் படித்திருக்க வேண்டும். சிறந்த கல்வி நிறுவனங்களில் சில • ஐ.ஐ.டி. பம்பாய்.• அண்ணா பல்கலைக்கழகம், சென்னை.• எம்.ஐ.டி. இன்ஸ்டிடீயூட் ஆஃப் டிசைன், புனே.• யூனிவர்சிட்டி ஆஃப் ஸ்ட்ராத்கிளைட், இங்கிலாந்து.• சால்மர்ஸ் இன்ஸ்டிடீயூட் ஆஃப் டெக்னாலஜி, ஸ்வீடன்.• யூனிவர்சிட்டி ஆஃப் வாட்டர்லூ, கனடா.