ஞாபக மறதியை விரட்டுவோம்!
மாணவர்கள், இளைஞர்கள், அலுவலர்கள், முதியவர்கள் என்று அனைவரும், அன்றாடம் சந்திக்கும் பிரச்சினை ‘ஞாபக மறதி’! பொதுவாக, ‘ஞாபக மறதி’ இருவகைப்படும் - ஒன்று தற்காலிகமானது; மற்றொன்று நிரந்தரமானது. இரண்டாம் வகை, வயோதிகம் காரணமாகவும், மூளை மற்றும் நரம்பு மண்டல பிரச்சினைகள் காரணமாகவும், வெகு சிலருக்கு மட்டுமே ஏற்படுகிறது. இவ்வகை ஞாபக மறதியை தீர்க்க மருத்துவரின் உதவி தேவைப்படும். ஆனால், முதலாம் வகை, பொதுவாக அனைவருக்கும் வரக்கூடியது. அது பெரும்பாலனோரின், அன்றாட இயல்பு வாழ்க்கையையே பாதிக்க கூடியதாக அமைகிறது. அதற்கு முக்கிய காரணம், இன்றைய அவசர சூழலில் ஏற்படும் அதீத பதற்றம், வேலை பளு, மன உளைச்சல்! மறதிக்கு உடலியல் காரணங்களை காட்டிலும், உளவியல் காரணிகளே பெரும் பங்கு வகிக்கின்றன. தன்னம்பிக்கை குறையும் போதும், மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதினாலும், தாழ்வு மனப்பான்மையினாலும், தேவையில்லாத குற்ற உணர்ச்சிகளினாலும் மறதி ஏற்படுகிறது. இதுதவிர, ஊட்டச்சத்து குறைவு, தவறான பழக்க வழக்கங்கள், பிடிக்காத பணி, குடும்பம் மற்றும் அலுவலக சூழல் போன்றவற்றாலும், ஞாபக சக்தி திறன் குறைகிறது. தீர்வு தான் என்ன? அன்றாடம் ஏற்படும் ஞாபக மறதியை, சில எளிய பயிற்சிகள் மூலம் பெருமளவு குறைத்துவிட முடியும். முதலில் எந்த ஒரு காரியத்திற்கும் திட்டமிடுதல் அவசியம். உதாரணமாக, மறுநாள் செய்யவேண்டிய பணிகளுக்கு, முதல் நாள் இரவே ஒரு அட்டவணை தயாரித்திக் கொள்ளுதல் வேண்டும். அவற்றை ஒரு தாளிலோ, மொபைல் போனிலோ குறித்துக் கொள்ளலாம். அடுத்ததாக மனதை ஒருமுகப்படுத்த பயிற்சி எடுக்கலாம். அதற்காக, வலுக்கட்டாயமாக கண்களை மூடி, தியானம் செய்யவேண்டும் என்றில்லை. இரைச்சலில் இருந்து விடுபட்டு, உங்களுக்கு பிடித்த சுற்றுச்சூழலில் மனதிற்கு பிடித்த இசையையோ, பாடல்களையோ கேட்கலாம். அன்றாடம் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்கினால், உடல் மட்டுமல்ல மனமும் புத்துணர்வு பெறும்! பொழுது போக்கில் அதிகம் கவனம் செலுத்தாமல் அதற்கென்று ஒரு நேரத்தை ஒதுக்கிவிடுதல் நலம். ‘அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு’ என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்தல் குழப்பத்தை தவிர்க்கும். ‘மல்டி டாஸ்கிங்’ எனப்படும் பல வேலைகளை ஒரே நேரத்தில், இழுத்து போட்டுக் கொண்டு செய்யாமல், ஒரு நேரத்தில் ஒரு வேலையில் மட்டுமே கவனம் செலுத்தலாம். கோபம், பொறாமை, அச்சம், குழப்பம் போன்ற தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்தல் அவசியம். உடற்பயிற்சியும் ஊக்கம் தரும்! ஞாபக மறதியை விரட்டுவோம்; சிகரம் தொடுவோம்! -எம். விக்னேஷ், மதுரை.