மாற்றி யோசி!
மாற்றம் ஒன்றே ஏற்றத்திற்கான வழி! ஆனால், நம்மில் பலர் மாற்றங்களை விரும்புவதில்லை. அன்றாடம் நடைபெறும் எதார்த்தமான செயல்களையே செய்ய விரும்புகிறோம். எப்போதும் பயணிக்கும் பாதையிலே பயணிக்க விரும்புகிறோம்! இப்படி எல்லோரும் செல்லும் பாதையில் பயணிப்பவர்கள் சாமானியர்கள். புதிய பாதையை தேர்ந்தெடுத்து பயணிப்பவர்கள், சாதனையாளர்கள். மாற்றுப்பாதை என்பது ‘மாற்று சிந்தனை’. மாற்றி யோசிப்பவர்களே, புதிய பாதையை உருவாக்குபவர்கள்! “உன்னுடைய எதிர்காலத்தை நீ மாற்றவே முடியாது. ஆனால், உன்னுடைய பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியும். உன்னுடைய பழக்க வழக்கம், எதிர்காலத்தை மாற்றும்” என்கிறார், பெர்னாட் ஷா. ஆம்! அனைவரிடத்தில் இருந்தும் மாறுபடும் பழக்கவழக்கம் தான் நம்மை பிறரிடம் இருந்து வித்தியாசப்படுத்தி அடையாளம் காட்டும். அதற்கு எடுத்துக்காட்டாக பீர்பாலைக் கூறலாம். பீர்பால் கதைகள் இன்றும் பிரபலமாகப் பேசப்படுவதற்கு காரணம் அவரின் மாற்றி யோசிக்கும் பண்பே! “நாளை, நம் நாட்டில் எத்தனை காகங்கள் இருக்கின்றன என குறிப்பிட வேண்டும்?” என்று அக்பர் கட்டளையிட்ட போது சிறிதும் கலங்காது இருந்தார், பீர்பால். மறுநாள் காலையில் அதே கேள்வி கேட்கப்பட்டவுடன், சற்றும் தயங்காமல், “பத்து லட்சத்து இருப்பத்தைந்தாயிரத்து முந்நூற்று முப்பது” என்றார், பீர்பால். “அதைவிட அதிகமாக இருந்தால் என்ன செய்வது?” என கேட்டவுடன், தைரியமாக, “வேறு நாட்டு காகங்கள் இங்கு வந்திருக்க வேண்டும்” என்றார். “குறைவாக இருந்தால்” என்று முடிப்பதற்குள், “நம் நாட்டு காகங்கள் வேறு நாட்டுக்கு போயிருக்கும்” என்று வேகமாக கூறினார், பீர்பால். பீர்பாலின் சாமார்த்தியம் கண்டு, வியந்து பாராட்டினார், அக்பர். மாற்றி யோசிப்பவர்களே பாராட்டு பெறுபவர்களாக இருக்கிறார்கள். மாற்றி யோசிப்பது என்பது நேர்மறை சிந்தனை. மாதம் ஒரு லட்சம் சம்பளம் தரும் வேலைக்கு ஆயிரம் பேர் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டனர். அனைவரிடத்திலும் ஒரே ஒரு கேள்வித்தான் கேட்கப்பட்டது. ஓட்டை டம்பளரை ஒன்றை கொடுத்து, இரண்டு நிமிடத்தில், அதனை நீரினால் நிரப்ப வேண்டும் என்றார்கள். பலரும் முயன்றார்கள். வேகமாக நீரை அள்ளி டம்பளரில் ஊற்றினார்கள். எப்படி ஓட்டை டம்பளர் நிரம்பும்? எல்லா நீரும் கீழே போய் விட்டது. யாராலும் டம்பளரை நீரால் நிரப்ப முடியவில்லை. ஒரே ஒருவன் மாற்றி யோசித்தான். டம்பளரை வாங்கி, அப்படியே நீரில் முழ்கடித்தான். அடுத்த நொடி டம்பளர் நீரால் நிறைந்திருந்தது. இப்படி மாற்றி யோசிப்பவர்களே வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள்! -க.சரவணன், மதுரை.