உள்ளூர் செய்திகள்

வளர்ச்சிக்குத் தேவை வாசிப்பு!

அறிவைப் பெருக்க ஆயிரம் வழிகள் இருந்தாலும், புத்தகம் வாசிப்பே சிறந்த வழி! ஒருவரை எது புத்தாக்கம் செய்கிறதோ? அதுதான் புத்தகம். தொட்டுத் தொட்டுப் பார்த்தால் அது வெறும் காகிதம்; தொடர்ந்து படித்தால் அதுவே வெற்றியின் ஆயுதம்! ‘வாசிக்க நேரமில்லை’ என்று சொல்வது, கோடாரியைக் கூர்மையாக்க நேரமில்லை என்று ஒரு விறகு வெட்டி சொல்வதற்கு ஒப்பாகும். வாரத்திற்கு ஒரு நூல்; வருடத்திற்கு குறைந்தது ஐம்பது நூல்கள் என்று வாசிக்கத் தொடங்குங்கள்; வாழ்க்கை மலரத் தொடங்குவதை உணரத் தொடங்குவீர்கள். இதைத்தான் வள்ளுவர்,‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு’ என்கிறார். ‘இன்றைய வாசகர் நாளைய தலைவர்’ என்கிறது ஒரு ஆங்கில பலமொழி. சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தை வாசித்த வெங்கட்ராமன்தான் ரமண மகரிஷியாக மாறினார். ‘திருக்குறள்தான் ஒரு படகோட்டியின் மகனாகப் பிறந்த என்னை பாரதத்தின் குடியரசுத் தலைவராக மாற்றியது’ என்றார், டாக்டர் அப்துல்கலாம். ‘என் கல்லறையில் எழுதுங்கள், இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறது’ என்று சொன்னார், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல். ‘பயங்கரமான போராட்ட ஆயுதம் எது?’ என்று கேட்டபோது ‘புத்தகம்’ என்றார், மார்ட்டின் லூதர்கிங். ஒரு நாளைக்கு ஒருவரிதான் படிக்கமுடியும் என்றால் ஆத்திச்சூடியை படியுங்கள். இரண்டு வரிதான் முடியும் என்றால் ஒரு திருக்குறளை படியுங்கள் என்பார்கள். ஏனென்றால் ஒருவரி போதும் ஒருவரை புரட்டிப் போடுவதற்கு... வாசிக்காத நாட்கள் வளராத நாட்கள். ‘கருத்து விதைகள் இதயங்களில் தூவப்படுகின்றபோது, செழித்துவளர்வது தனிமனிதன் மட்டுமல்ல; இந்த சமுதாயமும் தான்’ என்றார், கவிஞர் மேத்தா.  படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது, அதில் வரும் பணத்தில் 300 டாலருக்கு புத்தகம் வாங்கிவிடுவாராம், சார்லி சாப்ளின். ‘பத்துப் பறவைகளோடு பழகினால் நீயொரு பறவையாக முடியாது. ஆனால், பத்துப் புத்தகங்களோடு பழகினால் நீயொரு பதினொன்றாவது புத்தகமாகி எல்லோராலும் வாசிக்கப்படுவாய்’ என்றார், கவிஞர் தமிழன்பன். ஆகவே, வாசிப்பை சுவாசமாக்கி வாழ்க்கையை வசப்படுத்துங்கள். புது வெள்ளம் வரவில்லை என்றால் கடல்கூட காய்ந்துவிடும். அதுபோல புதியனவற்றைக் கற்றுக்கொள்ளாத மனிதர்கள் வளர்ச்சி பாதையில் செல்வதில்லை. அறிவு வளத்தை அள்ளித் தரும் புத்தகங்களே முன்னேற்றத்தின் ஏணிகள். கண்ணீரைத் துடைக்கும் நண்பர்களைவிட கண்ணீரே வராமல் தடுக்கும் நூல்களே சிறந்த நண்பர்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. -முனைவர் கவிதாசன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !