ஒழுக்கமும், கல்வியும் வெற்றியைத் தரும்!
புதுவிதமான படிப்பை தேர்வு செய்வதில் சிலருக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். அப்படித்தான் எனது இளவயதில் நானும், ‘ஆர்கிடெக்சர்’ படிப்பை தேர்வு செய்தேன். ‘ஆர்கிடெக்சர்’ படிப்பு புதுவிதமானது மட்டுமல்ல; அது ஒரு வாழ்வியல் முறை! ஒரு கட்டடத்திற்கான வரைபடத்தை தயாரிப்பது மட்டுமே ‘ஆர்கிடெக்ட்’டின் பணி இல்லை. கட்டடம் கட்டுவதற்கு முன்பும் சரி, கட்டுமானப் பணியிலும் சரி, கட்டிமுடிக்கப்பட்ட பிறகும் சரி அனைத்து நிலைகளிலும், சிறிய அம்சங்களையும் நுணுக்கமாக திட்டமிட்டு, ஒரு முழு கட்டடத்தையும், கட்சிதமாக கட்டிமுடிப்பதும் ஒரு ‘ஆர்கிடெக்ட்’டின் பணி தான்! வெளிநாடுகளில் பொதுவாக, ஒரு கட்டடத்திற்கு ‘லைட்டிங்’ எப்படி கொடுப்பது? என்பதற்கும் ஒரு சிறப்பு நிபுணர் இருப்பார். அந்தளவுக்கு ஒரு குறிப்பிட்ட பிரிவில் நிபுணத்துவம் பெறவும் இத்துறையில் வாய்ப்புண்டு. ஐந்து ஆண்டுகள் கொண்ட பி.ஆர்க்., படிப்பு, வேறு எந்த படிப்பிலும் கற்றுத்தர முடியாத அம்சங்களை கற்றுக்கொடுத்து, ஒரு முழுமையான மனிதராக ஒருவரை மாற்றிக்காட்டும்! ஏனெனில், பேசத் தயங்கும் ஒரு மாணவர் கூட, 5 ஆண்டுகள் முடிவில் சரளமாகவும், சகஜமாகவும் பேசக் கற்றுக்கொள்வார். படிக்கும் போதே, அனலட்டிக்கல் ஸ்கில் மற்றும் அப்சர்வேஷன் ஸ்கில் அதிகமாகும். அத்தகைய பாடத்திட்டத்தை கொண்டது, ஆர்கிடெக்சர்! இப்படிப்பை படிக்கும் அனைவரும் வாழ்க்கையில் சாதிப்பார்களா? அதிகம் சம்பாதிப்பார்களா? என்பதற்கு என்னால் உத்திரவாதம் தர முடியாது. ஆனால், ஒரு முழுமையான மனிதர்களாக வருவார்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியும்! இன்று பெரும்பாலான மாணவ, மாணவிகளிடையே ஆர்வத்தை தூண்டும் புதுமையான படிப்புகளில், பி.டெஸ்., எனும் ‘பேச்சலர் ஆப் டிசைன்’ படிப்பும் ஒன்று. குறிப்பாக, பெண்கள் அதிகளவில் விரும்பி, இப்படிப்பை தேர்வு செய்கின்றனர். சில கல்வி நிறுவனங்களே இப்படிப்பை வழங்குகின்றன என்றபோதிலும், வாய்ப்புகள் என்பது மிக அதிகம். இவ்வாறு எவ்வளவோ படிப்புகள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் ஒரு தனித்துவம் உண்டு. பொதுவாக, எந்த ஒரு துறையிலும் தேவைக்கு அதிகமான பணியாளர்கள் உருவாகும் போது, அத்துறையில் வேலை வாய்ப்புகள் குறையும் என்பது நடைமுறை. அதேசமயம், எந்த ஒரு படிப்பையும், எப்படி படிக்கிறோம் என்பதே நமக்கான வாய்ப்புகளை நிர்ணயம் செய்கின்றன! எந்த படிப்பையும், ‘நன்றாக கற்க வேண்டும்’ என்ற எண்ணத்தோடு கற்க வேண்டுமே தவிர, ‘படித்து முடித்தால் எவ்வளவு சம்பாதிக்க முடியும்’ என்ற எண்ணத்துடன் அல்ல! ஒழுக்கம் இருந்தால் கல்வி தானாக வரும். ஒழுக்கமும், கல்வியும் இருந்தால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம்! -பேராசிரியர் ஜி.ஜெயலட்சுமி, டீன், கிரசென்ட் ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர், பி.எஸ். அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகம், சென்னை.