உள்ளூர் செய்திகள்

மாற்றத்தை உணர்வோம்!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள், இன்ஜினியரிங் படிக்க விரும்புகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, இந்த எண்ணிக்கையில் வளர்ச்சி இல்லை; ஆனால், கல்லூரிகளில் இன்ஜினியரிங் இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றன. அதுவே, இன்ஜினியரிங் படிப்பில் காலி இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம்! தமிழக மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்வதற்கு பிரதான காரணம், ‘படித்துமுடித்தவுடன் வேலை கிடைக்கவேண்டும்’ என்ற எதிர்பார்ப்பு தான்; அதில் தவறில்லை. அதற்கு, பணியாளர்களை தொழில் நிறுவனங்கள் தேர்வு செய்வதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை புரிந்துகொண்டு, அதற்கேட்ப திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம். உதாரணமாக, தொழில்நுட்ப மாற்றத்தைக் கூறலாம். முன்பு வெறும் ‘கோடிங்’ தெரிந்திருந்தாலே, அவர்களுக்கு ஐ.டி., நிறுவனங்கள் வேலை வழங்கின. ஆனால், இன்று ‘கோடிங்’ செய்வதற்கு ஆட்டோமேஷன் வந்துவிட்டதால், ஷோõர்ஸ், அனலிட்டிக்ஸ், மொபிலிட்டி, கிளவுட் போன்ற பல்வேறு கூடுதல் திறன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், உள்ளார்ந்து ஆராயும் திறன், சிக்கல்களை தீர்க்கும் திறன், துறை சார்ந்த பிரிவில் ‘புராஜெக்ட்’ செய்த அனுபவம் என பல்வேறு திறன்களை எதிர்பார்க்கப்படுகின்றன. ஆகவே, கல்லூரி படிப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து, கோடிங் எழுதத்தெரிந்து, சிறந்த தொடர்பியல் திறன் இருந்தால் மட்டும் இனி வேலை பெற முடியாது! சிறந்த தொழில் நிறுவனங்கள் நல்ல கல்லூரிகளை தேர்வு செய்து அங்கு மட்டுமே நேர்காணல்களை நடத்துகின்றன. சமீபகாலமாக அதிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேசிய அளவில் துறை சார்ந்த போட்டியை நடத்தி, அதில் சிறந்த 3 ஆயிரம் மாணவர்களுக்கு மட்டும் வேலை வழங்குகின்றன. மேலும், இன்டர்ன்ஷிப் மூலமாகவும், சிறந்த ‘புராஜெக்ட்’ அடிப்படையிலும் திறன்வாய்ந்தவர்களுக்கு மட்டுமே வேலை வழங்குகின்றன. இந்த முறைகளை ஐ.டி., நிறுவனங்கள் மட்டுமின்றி, அனைத்து தொழில் துறை நிறுவனங்களும் பின்பற்றத்தொடங்கிவிட்டன. ஆகவே, டிஜிட்டல் பேக்ட்ரி, எம்படெட், ஆட்டோமோட்டிவ் சிஸ்டம்ஸ், சோலார், இன்டஸ்டிரியல் ரோபாட்டிக்ஸ் போன்ற பல பிரிவுகள் எதிர்காலத்தில் உருவாகும் வாய்ப்புள்ளன. எனவே, பாடத்திட்டத்தை தாண்டி, அடுத்த 4 ஆண்டுகளில் என்னென்ன தொழில்நுட்பங்கள் வரப்போகின்றன என்பதை அறிந்து, அதற்கேட்ப துறை சார்ந்த திறன் வளர்க்கும் பயிற்சிகளை பெற்றால் மிகப் பெரிய வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும். இன்டர்ன்ஷிப் செல்வது மிக அவசியம். வெளிநாடுகளில் இதற்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டிலிருந்தே மாணவர்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்ள துவங்கிவிட வேண்டும். சின்ன சின்ன சிக்கல்களுக்குக்கூட தீர்வு பெற, ஏராளாமாக செலவு செய்து வெளிநாடுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். நமது சமூகத்தில் உள்ள தேவைகளை உணர்ந்து, அதற்கு தீர்வு காணும் வகையில் நம் நாட்டிலேயே புதிய கண்டுபிடிப்புகளை பெருக்கும் வகையில் இன்றைய மாணவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். அதற்கு, நாம் சுயமாக தொழில்துவங்குவதற்கு தேவையான தன்னம்பிக்கையை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். சுயமாக சிந்திக்கும் திறன் பெற்றவர்களாக, சவால்களை சந்திப்பதற்கு தேவையான பக்குவத்தை பெற்றவர்களாக, தீர்வுகாணும் திறன் பெற்றவர்களாக அவர்களை உருவாக்கினால் மட்டுமே எதிர்காலத்தில் அவர்களால் சாதிக்க முடியும்! இறுதியாக, சுயகற்றல் என்பது மிக அவசியம். மொபைல், கம்ப்யூட்டர், லேப்டாப் ஆகியவற்றில் சுயமாக கற்றுக்கொள்ளும் கலாசாரத்தை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும். எது மாறினாலும், சுயகற்றல் மற்றும் என்றும் மாறாது! -பி.ஸ்ரீராம், தலைவர், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !