பொது அறிவு தயார் செய்வது எப்படி?
எந்த போட்டி தேர்வுக்கு சென்றாலும் கேள்வித்தாளில் முதலில் இடம்பெறுவது பொது அறிவு சார்ந்த வினாக்கள் தான்! இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த பொது அறிவு வினா, விடையை எவ்வளவு தான் படிப்பது? என சிலர் அலுத்துக் கொள்வது உண்டு. பொது அறிவு என்று சொல்லி விட்டு வானில் நட்சத்திரம் பற்றியும், விலங்கியலில் தவளை பற்றியும் கேட்கிறார்களே? என்று மற்ற சிலர் புலம்புவதும் உண்டு. பொது அறிவு என்றால் என்ன? உதாரணமாக இதை பார்ப்போம். ஜி.எஸ்.டி., என்று ஒருவர் கேட்டால் சரக்கு மற்றும் சேவை வரி என்று நாம் சொல்லுவோம். அவ்வளவு தான். அதற்கு மேல் சொல்லத் தெரியாது. இந்த கேள்விக்கான விடை அத்துடன் முடிந்துவிடவில்லை. ஜி.எஸ்.டி., வரிவிகிதம் மட்டும் இல்லாமல் அதன் வரலாற்றையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எனவே, பொது அறிவு என்பது நுணிப் புல்லை மட்டும் மேயாமல், ஒன்றை பற்றிய அடிப்படை விஷயங்களையும் அறிந்து வைத்திருப்பது தான். சிலர் பொது அறிவை தயார் செய்யும் போது, மிகப் பெரிய கோள் எது? நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எது? போன்ற ஹைதர் அலி காலத்து கேள்வி, பதில்களை மனைப்பாடம் செய்வார்கள். இதுமட்டுமே பொது அறிவு ஆகாது. பொது அறிவு என்பது வானம் போன்று எல்லை இல்லாதது. ஆயினும், சுருக்கமாக சொல்லவேண்டுமானால், அனைத்து துறைகளை பற்றியும் அறிந்து வைத்திருப்பது தான் பொது அறிவு. பொது அறிவு தயார் செய்ய சில யோசனைகள்: * நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களும் சரி, நம் நாட்டை சுற்றி நடக்கும் விஷயங்களும் சரி பொது அறிவு தான் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். * தேர்வுக்கு முன் தயார் செய்வதை விட, அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை கையேட்டில் குறித்து வைத்து வருவது நல்லது. * பொது அறிவு என்பது ஒரு குறிப்பிட்ட துறையை மட்டும் சார்ந்தது இல்லை; அனைத்து துறைகளிலும் ஆர்வம் காட்டுங்கள். * ஒரு புத்தகத்தை மட்டும் வைத்து தயார் செய்வது சரியான முறையாக அமையாது. பல்வேறு துறைசார்ந்த புத்தகங்கள் படிப்பது, தினமும் செய்தித்தாள்கள் வாசிப்பது, தொலைக்காட்சி செய்திகளை பார்ப்பது நற்பலன் தரும். * அடுத்தவர்கள் பேசுவதையும் கேளுங்கள். நிபுணர்கள் மற்றும் அறிஞர்களுடன் கலந்துரையாடுங்கள். ஏனெனில், பொது அறிவு கேள்வி அறிவையும் சார்ந்தது. * இறுதியாக ஒரு ரகசியம்... பொது அறிவை முழுவதும் கரைத்து குடித்தவர் எவரும் இல்லை! -எம்.விக்னேஷ், மதுரை.