உள்ளூர் செய்திகள்

மகிழ்வுடன் படியுங்கள்!

அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் கட்டாயம் ’சாய்ஸ் பேஸ்டு கிரெடிட் சிஸ்ட’த்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யு.ஜி.சி., அறிவுறுத்தியது. இதன்படி, இன்ஜினியரிங் மாணவர்கள், ஒரு செமஸ்டரில் இரண்டு பாடப்பிரிவுகளை, அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்துகொள்ளலாம். இதில் குறிப்பிட வேண்டிய அம்சம் என்னவெனில், மாணவர்கள், அவர்கள் துறை சார்ந்த பாடப்பிரிவுகளை எடுத்து படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு மெக்கானிக்கல் துறை மாணவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவை எடுத்து படிக்கலாம். இ.சி.இ., துறை மாணவர் சிவில் பாடப்பிரிவை தேர்வு செய்து படிக்கலாம்! இவ்வாறு, 4 ஆண்டுகளில் 16 பாடப்பிரிவுகளை அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப எந்த பாடத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்து படிக்கமுடியும். இன்ஜினியரிங் படித்து முடித்த பிறகு, உயர்கல்வி, பணிவாய்ப்பு, போட்டித்தேர்வு, நுழைவுத்தேர்வு மற்றும் சுய தொழில் என மாணவர்களின் எந்த  விருப்பத்திற்கும் இத்திட்டம் நிச்சயம் கைகொடுக்கும். தற்போது வேலை கிடைக்காத இன்ஜினியரிங் பட்டதாரிகள் நம் நாட்டில் இருப்பதை மறுப்பதற்கில்லை. அவர்களுக்கு ஏன் வேலை கிடைக்கவில்லை என்பதை ஆராய வேண்டியது அவசியம். கல்லூரியில் படித்து முடித்து வெறும் பட்டம் மட்டும் பெற்று சென்றால் வேலை கிடைப்பது கடினம். தனியார் நிறுவனங்கள் வேலைக்கு திறனாளர்களை தேர்வு செய்யும்போது, எந்த பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்குவதில்லை. திறமையைத் தான் பார்க்கின்றன! கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ், டெக்னிக்கல் ஸ்கில்ஸ், இன்ஜினியரிங் பட்டம் ஆகிய மூன்றையும் பெற்ற மாணவர்களுக்கு வேலை நிச்சயம் கிடைக்கும். பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு, கருத்தரங்குகளில் கட்டுரை சமர்ப்பிப்பது, பயிலரங்குகளில் பங்கேற்பது ஆகியவை மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும். வல்லுனர்களுடனான தொடர்பை ஏற்படுத்திக்கொடுக்கும். ’அனைத்து இன்ஜினியரிங் மாணவர்களும் ’இன்பிளான்ட்’ பயிற்சி எடுக்க வேண்டும்’ என்று ஏ.ஐ.சி.டி.இ., இயக்குனர் சமீபத்தில் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், இதை நாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்திவிட்டோம். இறுதியாக, மாணவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவெனில், அனைவரும் மகிழ்ச்சியுடன் படியுங்கள், திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். அப்போது, நிச்சயம் வேலையுடனோ அல்லது ஒரு தொழில்முனைவோராகவோ கல்லூரியை விட்டு வெளியே வருவீர்கள்! - ஜி.ரங்கநாத், முதல்வர், அதியமான் பொறியியல் கல்லூரி, ஒசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !