உள்ளூர் செய்திகள்

யார் அந்த அவர்கள்?

பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் தான், நம் முன்னேற்றத்தின் வேகத் தடை! ஒரு செயலில்  தீவிரமாக ஈடுபடும் பொழுது, அதைப் பற்றி அவர்கள் அப்படி நினைப்பார்களோ, இவர்கள் இப்படி சொல்வார்களோ என்று எண்ணிக் கொண்டிருந்தால், நிச்சயம் வெற்றி அடைய முடியாது! ஒருவர் தனது லட்சியத்தில் மற்றவர்கள் கருத்துக்களுக்கு என்று முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிக்கிறாரோ, அப்பொழுதே அவர் தன்னம்பிக்கையை இழக்க ஆரம்பித்து விடுகிறார் என்று அர்த்தம். தன்னம்பிக்கை இல்லாதவனின் முயற்சி எல்லாம், கார் ஓட்டத்தெரியாதவர், கார் பந்தயந்தில் வெற்றி பெற விரும்புவது போலத் தான்! நூற்றுக்கு தொன்னூறு பேர் அடுத்தவர்களை குறைத்தே மதிப்பு போட்டு சந்தோஷப்படுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்கும் பொழுது, நம்மை அறியாமலேயே நாம் தாழ்ந்து போய் விடுவோம்! அதனால், அவர்களது எண்ணங்களை புறம் தள்ளி, நமது எண்ணம், செயல் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி நமக்கான பாதையைத் தொடர வேண்டும். குறிப்பிட்ட சிலரே நம்மைத் தேடித் தேடி வந்து கருத்துச் சொல்வார்கள். அவர்களில் பெரும்பாலோர் நமது முன்னேற்றத்தை விரும்பாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் சொந்த வாழ்க்கையில்  முயற்சி செய்து, முன்னேற முடியாதவர்களாகவும் இருப்பார்கள். அவர்களை சிரித்துக் கொண்டே தவிர்த்து விடுவது நல்லது. காயப்படுத்தினால் அடிபட்ட புலி போல கருத்துச் சொல்வதை விட்டு, மறைமுகமாக நமது முன்னேற்றத்திற்கு குழி பறிப்பார்கள். தினசரி தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும். மற்றவர்கள் சொல்லி வருவதல்ல, தன்னம்பிக்கை! நம் உள்ளத்தில் தினசரி  தண்ணீர் விட்டு, உரம் போட்டு, வளர்க்க வேண்டிய மனப் பயிர் அது! வயதை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை! தினசரி அதிகாலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்து, குளித்து ஆடை மாற்றி நம் தோற்றத்தை பொலிவுள்ளதாக்குவதுதான், முதல் படி! அடுத்து நம்மைப் பற்றி உயர்வாக எண்ணிப் பழக வேண்டும்! மற்றவர்களை விட நம்மால் அதிகம் சாதிக்க முடியும் என்று நம்ப வேண்டும்! நம்மைப் பற்றி ஒருபோதும் தாழ்வாக நினைக்கக்கூடாது. அந்த எண்ணம் வந்தால் ஒரு போதும் முன்னேற முடியாது! எதிர்படும் தோல்விகள் என்பது வெற்றி என்ற மாடிக்குப் போகும் படிக் கட்டுகள்! அதனால், மற்றவர்கள் செய்யும் விமர்சனம் என்கிற தடைகளை தட்டி எறிந்து விட்டு, எதிர்படும் தோல்வி என்ற ஒவ்வொரு படியையும் மிதித்துக் கொண்டு மேல் ஏறுவோம்!  -துடுப்பதி ரகுநாதன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !