ஒரு நிமிட இலக்கு!
இன்றைய இளைஞர்களுக்கு, இலக்கு என்பது சற்று எரிச்சலூட்டக்கூடிய ஒன்றாக உள்ளது! அதிகாலையில் எழுந்து, எல்லாம் அவசர கதியில் முடித்து, இரண்டு நிமிடங்களில் தயாராகும் நூடுல்சை, நான்கு நிமிடங்களில் அப்படியே விழுங்கி, பள்ளி அல்லது கல்லூரிக்கு செல்வதற்குள், மராத்தான் ஓட்டத்தை நினைவுப்படுத்தும்! வகுப்பில் பாடபுத்தகத்தை திறக்கும் போது, அங்கும், ஆசிரியர், இவ்வளவு மதிப்பெண் வாங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கிறார். மனச்சோர்வை ஏற்படுத்தும் இந்த நடைமுறையை எளிதாகவே மாற்றலாம். மாணவர்களுக்கு மட்டுமல்ல... அனைத்து தரப்பினருக்குமான இலக்கில் வெற்றியடைய வழி உண்டு. அதை மெதுவாக அடைய, ‘ஒரு நிமிட இலக்கு’ என்று வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு நிமிடத்தில், என்ன இலக்கு வைத்துக் கொள்ள முடியும் என்று, கூடவே ஒரு வினா நம்மை துரத்தும். ஒரு நிமிட இலக்கு என்பது சாதனைக்கு அல்ல; நீங்கள் அடையப் போகும் எல்லையை எழுதி வைத்துக் கொள்வது. அது, அடையக்கூடியதாக இருக்க வேண்டும். மலையை அசைத்து விடுவேன் என்று, சினிமா பாணி இலக்கை எல்லாம் மறந்து விடுங்கள். நீண்டகால இலக்குகளை அடைய, கொஞ்சம் சோர்வு ஏற்படலாம். அதை முறையாக அடைய, முதலில், 10 நிமிட இலக்குகளை ஏற்படுத்தி, அதை ஒரு தாளில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட பதிலை படிப்பதாக இருக்கட்டும்; அம்மா சொன்ன, சின்ன, சின்ன வீட்டு வேலைகளாகட்டும்; இன்ன பிற விஷயங்களாகட்டும். பத்து நிமிடங்களுக்குள் அந்த வேலையை முடித்து விட்டால், எழுதி வைத்த தாளில், நீங்களே ‘டிக்’ செய்து சபாஷ் பெற்றுக் கொள்ளலாம். அடுத்து, 15 நிமிடம், 30 நிமிடம், ஒரு மணி நேரம் என, இலக்குகளை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து, அதற்குள், குறிப்பிட்ட வேலைகளை முடித்து கொண்டால், நீங்கள், கொஞ்சம், கொஞ்சமாக வெற்றியின் வாசலை தொட இருக்கிறீர்கள் என்று அர்த்தம்! 100 மீ., ஓட்டத்தில், எல்லைக்கோட்டில் கண்ணுக்கு தெரியும் சிவப்பு ரிப்பன் போல, குறிப்பிட்ட இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். முதலில் வர முடியாவிட்டாலும் கூட, எல்லையை கடந்து விட்டோம் என்ற சந்தோஷம் பிறக்கும். இனி... ஆறு போல, முன்னோக்கி செல்லப் பழகுங்கள்; தடைகள் இருக்கத் தான் செய்யும். அதை, கடந்து விட்டு போவதும், தவிர்த்து விட்டு போவதும், உங்கள் கையில் தான் இருக்கிறது! -இரா.வினோத்குமார், கோவை