குடும்பத்தை மறக்கலாமா!
இந்திய பெருநகரங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ‘கடந்த ஒரு ஆண்டில், இரண்டில் ஒருவர், 30 நாட்களுக்கும் குறைவாகவே அவர்களது பெற்றோருடன் இருந்ததாகவும், 10 நாட்களுக்கும் குறைவாகவே அவர்களது சகோதர, சகோதரிகளுடன் நேரத்தை செலவிட்டதாகவும், தெரிவித்துள்ளனர். பிரிட்டானியா-நீல்சன் இந்தியா நடத்திய இந்த ஆய்வில், ‘கடந்த மூன்று ஆண்டுகளில், இரண்டில் ஒரு நபர், பண்டிகை நாட்களில் ஒருநாளுக்கும் மேல் அவர்களது குடும்பத்தினருடன் இருந்ததில்லை’ என்று குறிப்பிட்டுள்ளனர். டில்லி, சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய பெருநகரங்களில் மேற்கொள்ளபட்ட இந்த ஆய்வில், 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள், ‘பணி அழுத்தம் காரணமாகவே, குடும்பத்தினருடன் செலவிடப்படும் நேரம் பெருமளவு குறைந்துவிட்டது’, என்று தெரிவித்துள்ளனர்! கொல்கத்தாவில் நடத்தப்பட்ட ஆய்வில், 40 சதவீதம் பேருக்கு மட்டுமே, அவர்களது சகோதர, சகோதரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் தெரிந்துள்ளதும், குறிப்பிடத்தக்கது!