உள்ளூர் செய்திகள்

‘புதிய கண்டுபிடிப்புகள் இந்தியாவில் குறைவு‘

பொறியியல் படிப்புகள் குறித்து இன்று பலரும், பல்வேறு கருத்துக்களை கொண்டுள்ளனர். உண்மை என்னவெனில், பொறியியல் இல்லாமல் உலகப்பொருளாதாரம் இல்லை. இது சிலருக்கு புரிந்தும், சிலருக்கு புரியாத நிலையும் நிலவுகிறது! இன்ஜினியரிங் படித்தால் வேலை இல்லை என்ற தவறான கருத்தும் சமுதாயத்தில் உள்ளது. இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்காது என்றால், வேறு எந்த துறையை எடுத்துப் படித்தால் உடனே வேலை கிடைக்கும்? எந்த துறையாக இருந்தாலும், தேவையான திறன்களை வளர்த்துக்கொண்டால் தான் வேலை கிடைக்கும். இந்தநேரத்தில், இன்ஜினியரிங்கிற்கு எதிர்காலம் மிக பிரகாசமாக உள்ளது என்பதை உறுதியாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பிற படிப்புகளைவிட, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அதிக ஊதியம், பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப பல்வேறு விதமான தேவை அதிகரிக்கிறது; தேவை அதிகமாக, அதிகமாக தொழில் நிறுவனங்கள் அதிகரிக்கின்றன. 120 கோடி மக்கள் தொகை கொண்ட நம்நாட்டில், அனைவருக்கும் உடை என்பது அவசியம்; அதேபோல், இருப்பிடம், போக்குவரத்து, மருத்துவம், பொழுதுபோக்கு, மீடியா, சுற்றுலா, கல்வி உட்பட 10க்கும் மேற்பட்ட துறைகள், மக்கள் தொகைக்கு ஏற்ப வளர்ந்து வருகின்றன. இன்ஜினியரிங் இன்றி இதில் எந்த துறையும் வளர்ச்சி அடைய முடியாது. எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பிற்கும் இன்ஜினியரிங் அடிப்படையாக விளங்குகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு புதிய கண்டுபிடிப்புகள் மிக மிக அவசியம். ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் அதிக பங்களிப்பை அளிக்கின்றன. சீனாவின் மக்கள் தொகை இந்தியாவை விட அதிகம் என்றபோதிலும், சீன மக்களுக்கு ஆங்கில மொழிப் புலமை மிகக் குறைவு. அதேநேரம், அவர்களது தாய்மொழியான சீன மொழியில் அதிக புலமை பெற்றவர்கள். தாய்மொழியுடன், ஆங்கில மொழிப்புலமை பெற்றிருந்தும், புதிய கண்டுபிடிப்புகளை பொறுத்தவரை, இந்தியர்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவு. இன்றைய பொருளாதார சூழலில், சீனாவுக்கும், இந்தியாவுக்கும் தான் போட்டி. சீன மக்கள், நமக்கு மிகப்பெரும் போட்டியாக வரப்போகிறார்கள். நாம் ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்தால், அவர்களை விட மிகப்பெறும் வளர்ச்சியை நம்மால் அடைய முடியும். உலகப் பொருளாதாரத்தில் இந்திய சிறப்பாக உள்ளதாக, உலக வங்கியே பாராட்டி உள்ளது. இந்நிலையில், சீனாவை விட மலிவான விலையில், தரமான பொருட்களை தரமுடியும் பட்சத்தில் நம்மால் முதலிடத்தை பிடிக்க முடியும். அதற்கு, இன்ஜினியரிங் துறையின் பங்கு மிக அவசியம். அதன் ஒரு சிறு முயற்சியாக, எங்கள் கல்லூரியில் ஒவ்வொரு துறையிலும், செயல்முறை கூடங்களுக்கு மாற்றாக, தொழில்முறை கூடங்களை அமைத்துள்ளோம். அதில், ஒவ்வொரு பொருளின் செயல்பாடுகளையும் உணர்ந்து, புதிய பொருளை உருவாக்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். போர்டு, ஹாவர்ட்ஸ், வேர்ல்பூல் போன்ற தொழில்நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, அவர்களது தொழில்முறைக் கூடங்களை எங்கள் கல்லூரியில் உருவாக்க உள்ளோம். இதன்மூலம், சுயதொழில் செய்யவும் மாணவர்களை ஊக்குவிக்கிறோம்!  -முனைவர் ஆர்.எம். சுரேஷ், முதல்வர்,ஸ்ரீ  லட்சுமி அம்மாள் பொறியியல் கல்லூரி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !