உள்ளூர் செய்திகள்

சென்ட்ரல் கவுன்சில் ஆப் இந்தியன் மெடிசன்

இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் சோவ ரிக்பா ஆகிய தொன்மையான மருத்துவங்களை முறைப்படுத்துவதற்காகவும், அத்துறை சார்ந்த மருத்துவ வல்லுநர்களை உருவாக்குவதற்காகவும் மத்திய அரசால் உருவாக்கப்பட்டதே, ‘சென்ட்ரல் கவுன்சில் ஆப் இந்தியன் மெடிசன்’ எனும் இந்திய மருத்துவத்திற்கான மத்தியக் குழு.அறிமுகம்:இந்த அமைப்பானது 1971ம் ஆண்டு இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உருவாக்கப்பட்டது. கடந்த 45 ஆண்டுகளாக இந்திய மருத்துவ முறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை இந்த அமைப்பு கண்காணித்து வருகிறது. இதில் சோவ ரிக்பா எனப்படும் திபேத்திய நாட்டு மருத்துவ முறையானது, சமீபத்தில் 2012ம் ஆண்டில் தான் சி.சி.ஐ.எம்., அமைப்பில் இணைக்கப்பட்டது. திபேத்திய மருத்துவ முறையாக இருந்தாலும், இது பரவலாக இந்தியாவின் பல இடங்களில் பழக்கத்தில் உள்ளதால் இதற்கு இந்த முக்கியத்துவம் இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.செயற்பாடுகள்: ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் சோவ ரிகா ஆகிய படிப்புகளுக்கான கல்வித் தரத்தினை மேம்படுத்துவது. இந்திய மருத்துவ அங்கீகாரத்திற்கான தகுதி நிலைகளை மத்திய அரசிற்கு பரிந்துரைப்பது. மத்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1970ன் கீழ் இந்திய மருத்துவத்திற்கான பதிவை  மேற்கொள்ளுதல், பராமரித்தல் மற்றும் திருத்தங்களை செய்தல். பண்டைய மருத்துவ தொழில்முறைகளை பயிற்சியாளர்கள் கடைப்பிடிக்கிறார்களா என்பதை உறுதி செய்வது. பட்டதாரிகளின் திறன்களை அதிகரிக்கத் தேவையான முயற்சிகளை எடுப்பது.விருதுகள்:இந்திய மருத்துவ முறைகளில் வெவ்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் துறை சார் வல்லுநர்களுக்கு சி.சி.ஐ.எம்., சார்பாக பல விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை, வைத்திய யாதவ்ஜி திரிகம்ஜி விருது - இது ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த சேவை புரிந்தவரை கவுரவிக்கும் விதமாக ரூ.1 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது. ஹகிம் அஜ்மல் கான் விருது - இது யுனானி மருத்துவத்தில் தன்னிகரற்ற சேவைப் புரிந்தவர்களுக்கான ரூ.1 லட்சம் மதிப்பிலான விருது ஆகும். ஆச்சார்யா விருது - ஆயூர்வேதா மருத்துவ முறையில் ஐந்து, யுனானி மருத்துவ முறையில் இரண்டு மற்றும் சித்த மருத்துவத்திற்கு ஒன்று என துறை சார்ந்த சிறந்த ஆசிரியர்களுக்கான தலா ரூ.25 ஆயிரம் மதிப்பிலான விருது இது.2019ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில், ஆயுஷ் அமைச்சகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை 71.36 கோடியில் இருந்து 92.31 கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளது, மத்திய அரசு. இதன் மூலம் ஆயுஷ் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கழகங்களுள் ஒன்றான சி.சி.ஐ.எம்., கழகமும் முக்கிய வளர்ச்சியை அடையும் எனக் கருதப்படுகிறது.விபரங்களுக்கு: www.ccimindia.org


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !