ஆன்லைன் வழிக் கல்வி சரியான தீர்வாகாது!
கோவிட்-19 பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக, நம் நாட்டில் ஆன்லைன் வழி கற்பித்தல் முறை அதிகரித்து வரும் நிலையில், ஒரே இரவில் இதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்பது சரியான தீர்வாக அமையாது.முதலில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கும் பேராசிரியர்கள் ஆன்லைன் கற்பித்தல் முறைக்கு தேவையான பயிற்சி பெற வேண்டும். அதன்பிறகே, மாணவர்கள் இந்த முறைக்கு பழக்கப்படுத்தப்பட வேண்டும். மாணவரகள் - பேராசிரியர்கள் இடையிலான புரிந்துணர்வு வளர்ந்தால் மட்டுமே ஆன்லைன் வழி கல்வி முறை முழுமையடையும். இதற்கு ஓரிரு ஆண்டுகள் கூட தேவைப்படலாம். கல்லுாரியில் தொழில்நுட்ப ரீதியிலான கட்டமைப்பு வசதிகள் இருந்தாலும், மறுபுறம் அதனை பெறும் மாணவர்களுக்கும் அனைத்து வசதிகளும் இருப்பதை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம்.இப்போதுள்ள சூழ்நிலைக்கு ஆன்லைன் முறை கற்பித்தலை ஒரு குறுகிய கால பயன்பாட்டாக வைத்து கொள்ளலாமே தவிர, அதையே ஒரு முழுமையான தீர்வாகக் கருதக்கூடாது. மாணவர் கல்லுாரி சூழலுக்கு வந்ததால் தான், கல்வி மட்டுமின்றி சமூகத்தில் தேவைப்படும் அனைத்தையும் கற்று கொள்ள முடியும். தேர்வை பொறுத்தவரை, ஆன்லைன் முறையில் ஒரு மாணவரின் கற்றல் மதிப்பீட்டை தெளிவாக தெரிந்து கொள்ள முடியாது. கல்லுாரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு சமூக இடைவெளியுடன் செமஸ்டர் தேர்வை சரியாக திட்டமிட்டு நடத்தலாம். அதிகரிக்கும் உள்ளூர் ஆர்வம்மேலும், கொரோனா காரணமாக தற்போது மாணவர்கள் மத்தியில் வெளியூர் செல்லாமல் தங்களது சொந்த ஊரிலேயே படிக்க ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் உள்ளூர் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்கு ஏற்ப கல்லுாரிகளில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த தேவையான கட்டமைப்பு வசதிகளை நிர்வாகங்கள் செயல்படுத்த வேண்டும். எங்கள் கல்லுாரியில் ‘இ–லேர்னிங்’ வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. அதிகபட்சம் ஆண்டுக்கு, 35 லட்சம் ரூபாய் என்ற அளவிலான சம்பளத்தில் மாணவர்கள் வேலையை தேர்வு செய்துள்ளனர். இறுதியாண்டு மாணவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதுபோன்ற நெருக்கடியான நேரங்களில் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், மாணவர்-ஆசிரியர் உறவு என்பது கல்லுாரி வளாகத்தில் மட்டும் தான் நிலைத்திருக்கும்.- பிரசாத், தாளாளர், கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை