பிரி-ஸ்கூல் அளவில் என்ன கற்றுத்தரவேண்டும்
குழந்தைகளைப் பள்ளிப் படிப்புக்கு அனுப்பும் முதல் நிலையாக பிரி-கேஜி வகுப்புகளில் சேர்ப்பது தற்போது வழக்கமாகிவிட்டது. இந்த வகுப்புகளை பிரி-ஸ்கூல் வகுப்புகளில் கல்விச்சாதனை அல்லது உணர்வுப்பூர்வமான மேம்பாடு என்ற இரண்டில் எதை மையப்படுத்தி வகுப்புகளை நடத்த வேண்டும் என்ற ரீதியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் உளவியல் பிரிவு பேராசிரியரான கேரன் பியர்மன் தலைமையில் இதுபோன்ற ஒரு ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. மத்திய பென்சில் வேனியாவின் 44 மையங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் ‘சைல்டு டெவலப்மென்ட்’ இதழில் விரைவில் வெளியாகவுள்ளன. இந்த ஆய்வின் சில சுவாரசியமான முடிவுகளை உங்களுக்குத் தருகிறோம். பிரி-ஸ்கூல் அளவிலேயே வாசிக்கும் திறமையைக் கற்றுக்கொடுப்பது பள்ளிப்படிப்பின் வெற்றிக்கு அடித்தளமாய் இருக்கும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. நல்ல சமூகப் பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொடுப்பதன் மூலம் நண்பர்களை உருவாக்கிக்கொள்வது பிரச்னைகளைத் தவிர்ப்பது போன்ற பலன்களைப் பெற முடியும் என்று இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகளின் உணர்வுபூர்வ மேம்பாடும் கல்வி மேம்பாடும் ஒருங்கே முன்னேற்றும் வகையில் “ரிசர்ச் பேஸ்டு, டெவலப்மென்டலி இன்பார்ம்டு (கீஉஈஐ) என்ற புதிய ‘ஹெட்ஸ்டார்ட்’ மாதிரிப் பயிற்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ‘ரெடி’ மாதிரியின் கீழ் சமூக மற்றும் உணர்வுபூர்வமேம்பாட்டுடன், மொழி வளர்ச்சி மற்றும் வாசிக்கும் திறமைகளை ஒருங்கே மேம்படுத்தும் வகையிலான பயிற்சிகளை பிரி-ஸ்கூல் குழந்தைகள் பெற வகை செய்யப்பட்டுள்ளது. பிரி ஸ்கூல் பயிற்சிகளில் உள்ளவாறே ஆல்பாபெட்களை வாசிப்பது, எழுத்துக்களுடன் தொடர்புடைய சப்தங்களை பயிற்றுவிப்பது போன்ற பயிற்சிகளும் ‘ரெடி’ முறையில் உள்ளன. பிரி ஸ்கூல் அளவில் இந்தத்திறமைகள் பெற்ற குழந்தைகள் பின்னாளில் கல்வித் தரத்தில் மேம்பட்டு இருக்கிறார்கள் என்ற உண்மையையும் ஆய்வு முடிவுகள் வெளியிட்டுள்ளன. ‘ரெடி’ முறையில் மாணவர்களுடன் பேசுவதற்கும், பழகுவதற்கும் ஆசிரியர்களுக்கு அதிக நேரம் ஒதுக்கப்படுகிறது. மாணவர்களிடம் கேள்விகளை எழுப்புவது, கதை சொல்லச் சொல்லி குழந்தைகளை ஊக்கப்படுத்துவது போன்ற உத்திகளின் மூலம் குழந்தைகளின் மொழித்திறன், வார்த்தைத்திறன் போன்றவை மேம்படுத்தப்படுகிறது. பிரி-ஸ்கூல் பருவத்தில் உள்ள குழந்தைகளைப் பெரிதும் பாதிக்கும் உணர்வுரீதியான சோர்வு மற்றும் சண்டை போன்ற பிரச்னைகளை நீக்கவும் வழிகள் உள்ளன. இவ்வகுப்புகளில் சமூகப்பிரச்னைகளையும், கற்பனைக் கதாபாத்திரங்களின் மூலம் மனச்சோர்வை நீக்கி உற்சாகத்தை ஊட்டும் பாடப்பகுதிகள் உள்ளன. கதைகளின் மூலம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி பொறுமையாக இருப்பதன் மூலம் ஏற்படும் நிம்மதி அவர்கள் மனதில் விதைக்கப்படுகிறது. கோபம் வருத்தம் போன்ற குணங்களை அடையாளம் காணும் முறைகளும், வருத்தத்துடன் உள்ள ஒருவரிடம் பகிர்ந்துகொள்வதன் மூலம் அவர்களை சரிசெய்யும் வகையிலான பாடமுறைகளும் பிரி-ஸ்கூல் பயிற்சியான ‘ரெடி’ மூலம் தரப்படுகிறது. உணர்ச்சிமயமான முடிவெடுக்கும் நிலையை மாற்றி, யோசித்து நிதானமாய் செயல்படும் சுயக்கட்டுப்பாடு கொண்ட மனிதர்களாகவும், பிரச்னைகளுக்குத் தீர்வு தருபவராகவும், சமூக அழுத்தங்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தயாரானவர்களாகவும் குழந்தைகளை மாற்றி வெற்றியாளர்களாக்க பிரி-ஸ்கூல் கல்வி முறை புதிய அவதாரம் எடுத்து வருகிறது.