மீண்டெழுமா இந்திய ஐ.டி., துறை
நாஸ்காம் எனப்படும் இந்திய சாப்ட்வேர், ஐ.டி., நிறுவனங்களின் கூட்டமைப்பு சமீபத்தில் மும்பையில் தனது வருடாந்திர மாநாட்டை நடத்தியது. பொதுவாக இந்த மாநாட்டில் பேசப்படும் கருத்துக்கள் இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை பிரதிபலிப்பதாக இருக்கிறது. இந்த மாநாட்டில் பேசப்பட்ட முக்கியமான தலைப்பு - ‘கடினமான காலகட்டம், மந்தமான பொருளாதாரம், விற்பனைச் சரிவு‘ என்பதாகும். பொதுவாக இதில் கலந்து கொண்ட முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் அனைவருமே பொதுவாக ஒப்புக் கொண்ட அம்சம் தற்போதைய ஐ.டி., துறையின் கடினமான சூழல் தான். டி.சி.எஸ்., தலைவர் ராமதுரை தற்போது சவாலான சூழ்நிலை நிலவுவதாகக் கூறினார். நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய சூழல் இருப்பதாக இன்போசிஸ் டெக்னாலஜிஸ் தலைவர் நந்தன் நிகலேனி கூறினார். தற்போதைய சூழல் நீடிப்பதாகவும் இதுவரை இல்லாத அளவுக்கு கடினமானதாக இருப்பதாகவும் கூறினார். பல ஆண்டுகளாக 30 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்தை நாம் பெற்றிருந்ததால் அமைப்பில் பலவீனங்களை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார். ‘நமது வாடிக்கையாளர்கள் தங்களது கடினமான சூழ்நிலையைப் பற்றிக் கூறுகிறார்கள். அவர்களால் குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் பல தடைகள் தாண்டப்பட வேண்டியிருப்பதால் இது நம்மையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய சாப்ட்வேர் துறையானது இதற்கு முன்பும் 2000ம் ஆண்டில் இதே போன்ற கடினமான சூழலை சந்தித்தது. பப்பிள்-இண்டஸ்ட்ரி கிராஷ் ஆன போது அதை சமாளித்து பிரமாதமான வளர்ச்சியை எட்டியது. அப்போது பன்னாட்டு நிறுவனங்கள் கூட தடுமாறிய போதும் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் சிறப்பான செயல்பாட்டை உறுதி செய்தன. கடந்த ஆண்டு ஆசிய பொருளாதார நெருக்கடி உச்சத்தை எட்டிய போது, இந்திய ஐ.டி., நிறுவனங்கள் தங்களது அவுட்சோர்சிங் பிசினஸ் அதிகரிக்கும் என்றே நம்பின. ஆனால் உலகம் முழுவதும் இந்த பொருளாதார மந்த நிலை பரவியதால் இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் பிசினசை தந்து கொண்டிருந்த பல நிறுவனங்கள் காணாமலே போய்விட்டன. ஜனவரி 7ந்தேதி சத்யம் மோசடி வெளிவந்த போது இந்திய ஐ.டி., துறை தடுமாறத் தொடங்கியது. இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களில் 4வது இடத்திலிருந்து சத்யத்தின் பன்னாட்டு வாடிக்கையாளர்கள் நம்பிக்கையிழக்கத் தொடங்கினர். 3 ஆண்டுகளுக்கு முன்பு 35 சதவீதமாக இருந்த நம் ஐ.டி., நிறுவனங்களின் லாப விகிதம் இந்த ஆண்டு 23 சதவீதமாகக் குறைந்தது. இந்த நிலையில் இந்திய சாப்ட்வேர் துறை தனது உத்திகளை மாற்றியமைக்கும் கட்டாயத்திலிருக்கிறது. அமெரிக்க நிறுவனங்களுடனான வாணிபம் நம்பிக்கை தருவதாக இல்லாததால், இந்திய நிறுவனங்கள் ஐரோப்பாவை நோக்கி தங்களது பார்வையை திருப்பியுள்ளன. எனினும் பன்னாட்டு நிறுவனங்கள் தான் இந்தியாவில் ஐ.டி., அவுட்சோர்சிங் வேலைகளை தற்போதுஅதிகமாகப் பெறவுள்ளன. இதனால் இந்தியாவுக்குள் நமது ஐ.டி., நிறுவனங்கள் வாய்ப்புகளைத் தேடும் தேவை அதிகரித்துள்ளது. எல்அண்ட் டி, இன்போடெக் நிறுவனத்தின் மொத்த வாணிபத்தில் 3 சதவீதமே இந்திய வாணிபமாக இருக்கிறது. கடந்த ஆண்டு தான் இன்போசிஸ் நிறுவனம் இந்திய வாணிபத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியது. டில்லி சாப்ட்வேர் மற்றும் என்.ஐ.ஐ.டி., நிறுவனங்கள் இன்போசிஸை விட இந்திய பிசினஸை அதிகம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே ஐ.டி., துறை பற்றிய பயங்களும் தேவையில்லை. ஆதாரமில்லாத மூட நம்பிக்கைகளும் தேவையில்லை. தெளிவாக திட்டமிட்டு பலனளிக்கக் கூடிய திறனை நமது ஐ.டி., துறை பெற்றிருக்கிறது. தற்போதைய இறுக்கமான சூழலிலிருந்து எழுந்து வெற்றிகரமாக அது பயணித்திடும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.