உள்ளூர் செய்திகள்

உயிர்வேதியியல் (பயோகெமிஸ்ட்ரி)

உயிரியல் துறையில் நாட்டம் அதிகம் உள்ளவர்களுக்கான படிப்புகள் தற்போது அதிக அளவில் உள்ளன. அவற்றில் அதிக மாணவர்களால் தேர்வு செய்யப்படும் ஒரு துறை உயிர்வேதியியல் துறையாகும். உயிர்வேதியியல் என்பது உயிரினங்களில் நிகழும் வேதியியல் மாற்றங்களை படித்து ஆராயும் துறையாகும். உயிரணுக்களின் அங்கமான புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள், நியூக்ளிக் அமிலங்கள் மற்றும் உயிர்மூலக்கூறுகள் (பயோ மாலிக்யூல்) போன்றவற்றின் வடிவம் மற்றும் செயல்பாடுகள் போன்றவற்றை இத்துறையில் படிக்கலாம். உயிர்மூலக்கூறுகளில் பெரும்பாலானவை சிக்கலான மற்றும் பெரிய மூலக்கூறுகள் கொண்டவை. இவை பாலிமர்கள் என அழைக்கப்படுகின்றன. பாலிமர்கள் சிறு சிறு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. இதை மோனோமர் என்று அழைப்பர். உதாரணமாக புரதம் ஒரு பாலிமர். புரதத்தின் கூறுகள் ஒவ்வொன்றும் தலா 20 அமினோ அமிலங்கள் கொண்டவை. உயிர்வேதியியல் துறையின் வாயிலாக இத்தகைய பாலிமர்களின் வேதியியல் தன்மைகள் மற்றும் என்சைம் வினைகள் போன்றவற்றை ஆராய்ந்து படிக்கலாம். மருத்துவம், விவசாயம், நியூட்ரிசன் துறைகளில் இத்துறை வல்லுநர்களின் பங்களிப்பு அதிகம் உண்டு. மருத்துவத்துறையில், புதிதாக ஏற்படும் நோய்க்களுக்கான காரணங்கள், மருத்துவ முறைகள் போன்றவற்றை ஆராய்வர். விவசாயத்துறையில், புதிய யுக்திகளை பயன்படுத்தி பயிர்வளர்த்தல், பூச்சிக்கொல்லிகளை தயாரித்தல், பயிர்களை பாதுகாத்தல் போன்றவற்றை மேம்படுத்துவர். நியூட்ரிசன் துறையில், வைட்டமின்கள், புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை அதிகம் உள்ள உணவுப்பொருட்களை உண்ணுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள், சரியான அளவில் ஊட்டச்சத்துகளை பேணும் வழிமுறைகள் போன்றவை ஆராயப்படுகின்றன. இத்துறையில் உயிர்வேதியியல் மட்டுமல்லாமல் மூலக்கூறு உயிரியல், ஜெனிடிக்ஸ்(மரபியல்), மைக்ரோபயாலஜி, வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிசம்) போன்றவற்றையும் படிக்கலாம். படிப்புகள்: இத்துறையில் சேர விரும்பும் மாணவர்கள் குறைந்த பட்சத் தகுதியாக பிளஸ் 2 வில் அறிவியல் பாடத்தை பின்புலமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை(பி.எஸ்சி.,) , முதுநிலை (எம்.எஸ்சி.,), பிஎச்.டி., போன்ற படிப்புகள் இத்துறையில் உள்ளன. இத்துறையில் இளநிலை முடித்தவர்கள் முதுநிலைப்படிப்பில் பயோடெக்னாலஜி, பயோஇன்பர்மேடிக்ஸ் உள்ளிட்ட உயிரியல் சார்ந்த துறைகளில் சேர தகுதி பெற்றவர்களாவர். பயிலும் நிறுவனங்கள்: சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை (http://www.unom.ac.in/) அவினாசிலிங்கம் பெண்கள் கல்லூரி, கோவை (http://www.avinashilingam.edu) வைசியா கல்லூரி, சேலம் (http://www.vysyacollege.org) ராமகிருஷ்ணா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை (http://www.ramakrishnacasforwomens.org) அப்போலோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை (http://www.apollocolleges.in) சவுராஷ்டிரா கல்லூரி , மதுரை, (http://www.soucollege.com) டி.ஜி.,வைஷ்ணவ் கல்லூரி, சென்னை (http://www.dgvaishnavcollege.com) எத்திராஜ் பெண்கள் கல்லூரி, சென்னை (http://www.ethirajcollege.edu.in) பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி (http://www.bdu.ac.in) மீனாட்சி பெண்கள் கல்லூரி, சென்னை (http://www.meenakshicollege.com) வேலைவாய்ப்பு: இத்துறையில் பட்டப் படிப்பு முடித்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆய்வுப்பணியில் அமரலாம். புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கு மருந்துகளை ஆராயும் சில மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணிகளில் இவர்களின் பங்கு மிக அதிகமாக இருக்கும். பயிற்சி நிலையில் இருப்பவர்கள் மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை ஊதியம் பெறலாம். ஆய்வுத்துறையில் ஈடுபடுபவர்களின் ஊதியம் பயிற்சி நிலையில் இருப்பவர்களை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். வெளிநாடுகளில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் இத்துறையில் பிஎச்.டி., முடித்தவர்களுக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !