சி.எப்.ஏ., தேர்வுகள்
இந்தியாவில் சீரான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக, பொருளாதார நிபுணர்களின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் பொருளாதாரம் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பும் பெருகியுள்ளது. அதனால் பொருளாதார நிபுணர்களுக்கான தேர்வான "சார்ட்டர்டு பினான்சியல் அனலைசிஸ்ட்' (சி.எப்.ஏ.,) தேர்வை எழுத மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அமெரிக்க கல்வி நிறுவனங் கள், பொருளாதார நிபுணர்களுக்கான தேர்வை (சி.எப்.ஏ.,) இந்தியாவிலேயே நடத்தவும் முன் வந்துள்ளன. இதற்கு முன் சி.எப்.ஏ., தேர்வுகள் வெளிநாட்டிலேயே நடத்தப்பட்டன. தற்போது உள்நாட்டில் சி.எப்.ஏ., தேர்வுகள் நடக்கவிருப்பதால், பொருளாதாரப் பிரிவில் ஆர்வமுள்ளவர்கள் எளிதில் இந்த தேர்வை எழுத முடியும். ஏதாவது ஒரு பட்டப் படிப்பை முடித்தவர்கள், சி.எப்.ஏ., தேர்வை எழுதலாம். இந்த தேர்வு மூன்று கட்டமாக நடைபெறுகிறது. சி.எப்.ஏ., முதல் கட்ட தேர்வு உலகம் முழுவதும் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. இந்த முதல் கட்ட தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட தேர்வுகள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகிறது. இந்த இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் நடத்தப்படுகிறது. சி.எப்.ஏ., தேர்வை எழுத கட்டணமாக ஒவ்வொரு கட்டத்திற்கும் ரூபாய் 47 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் பொருளாதார பிரிவில் நிபுணர்களாக பணிபுரிய முடியும். மாணவர்கள் தொலைநிலைக் கல்வி மூலம் சி.எப்.ஏ., தேர்வை எழுதலாம். சி.எப்.ஏ., தேர்வுகளின் பாடத்திட்டங்கள், உலகளாவிய சந்தைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன. உள்ளூர் சந்தைகளை அடிப்படையாக கொண்டு அவை செயல்படுவதில்லை. பொதுவாக சி.எப்.ஏ., தேர்வுகள், உலகம் முழுவதும் ஒரே பாடத் திட்டத்தினை கொண்டு நடத்தப்படுகின்றன. சி.எப்.ஏ., முதல் கட்ட தேர்வானது அப்ஜக்டிவ் முறையில் நடத்தப்படுகிறது. இரண்டாம் கட்ட தேர்வு குறுகிய விடையளிக்கும் பகுதியாக அமைகிறது. மூன்றாம் கட்ட தேர்வானது குறுகிய மற்றும் விரிவாக எழுதும் பகுதிகளைக் கொண்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில், வெகுசில மாணவர்களே பொருளாதார பிரிவில் படிப்பதற்கும், பணிபுரிவதற்கும் ஆர்வம் காட்டினர். இந்த நிலை சிறிது சிறிதாக மாறி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் 12 ஆயிரம் மாணவர்கள் சி.எப்.ஏ., தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். சி.எப்.ஏ., தேர்வுக்கு விண்ணப் பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா, சீனா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி காரணமாக, நிபுணர்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்த தேவையை பூர்த்தி செய்தால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பன்மடங்கு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் எம்.பி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., பட்டங்களை பெற்று நிபுணர் ஆவதற்கும், சி.எப்.ஏ., தேர்வை எழுதி நிபுணர் ஆவதற்கும் வித்தியாசம் உள்ளது. எம்.பி.ஏ., போன்றவை பொருளாதாரத்திற்கென்றே உருவாக்கப் பட்ட தனிப்பட்ட மேல்படிப்புகள். ஆனால் சி.எப்.ஏ., தேர்வை எழுதி நிபுணர் ஆவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முயற்சியால் மட்டுமே சாத்தியம். மாணவர்கள் பட்டப்படிப்பில் எந்த பிரிவில் பயின்றிருந்தாலும், இந்தத் தேர்வை எழுத முடியும். தற்போது இந்தியாவில் 680 சி.எப்.ஏ., படிப்பு முடித்தவர்கள் இருக்கிறார்கள். இதில் 440 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 240 பேருக்கு இன்னும் சான்றிதழ் வழங்கப்படவில்லை. மேலும் இந்த ஆண்டு 12 ஆயிரம் பேர் சி.எப்.ஏ., தேர்வு எழுத விண்ணப்பித்திருப்பதால், இந்தியாவில் சி.எப்.ஏ.,க் களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். மேலும் இந்த தேர்வின் விபரங்களை www.cfainstitute.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.