இன்போசிஸ் உங்கள் இலக்கா
இன்று கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் படிக்கும் இளைஞர்களில் பெரும்பாலானோருக்கு கனவுத் தளமாக இருப்பது இந்தியாவின் மாபெரும் சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம்தான். கடந்த ஆண்டில் இந்த நிறுவனத்துக்கு வேலைக்கு விண்ணப்பித்து வந்தக் கடிதங்களின் எண்ணிக்கை 4 லட்சத்திற்கும் அதிகம். ஆனால் இந்த நிறுவனம் இவற்றில் கிட்டத்தட்ட 94 சதவிகித விண்ணப் பங்களை நிராகரித்துவிட்டது. இந்த நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களில் 28 சதவிகிதம் பேர் பணிகளில் இணையவில்லை என்பது கூடுதல் தகவலாகும். இந்த நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு மொத்தம் 4 லட்சத்து 812 விண்ணப்பங்கள் பணி வேண்டி அனுப்பப்பட்டன. இவற்றில் 77 ஆயிரம் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு விடப்பட்டு, இவர்களில் 61 ஆயிரம் பேருக்கு நேர்காணல் தேர்வுகள் நடத்தப்பட்டு, 26 ஆயிரத்து 200 பேருக்கு பணி நியமனக் கடிதங்கள் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் கடந்த ஆண்டில் இந்த நிறுவனத்தில் புதிதாக 18 ஆயிரத்து 905 பேர் பணியில் இணைந்துள்ளனர். ஆனால் அட்ரிஷனைத் தவிர்த்துப் பார்த்தால் 6 ஆயிரத்து 837 என்ற எண்ணிக்கையில் நிறுவனத்தின் ஊழியர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் சக நிறுவனங்களையும் சேர்த்துப் பார்க்கும் போது கடந்த நிதியாண்டு முடிவில் மொத்தம் ஒரு லட்சத்து பதிமூன்றாயிரத்து எந்நூறு1,13,800 பேருக்கு புதிய பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இன்போசிஸ் நிறுவனமானது புகழ் பெற்ற பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்து புதிதாகப் படிப்பை முடிக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. இவை தவிர தேவைக்கேற்ப புராஜெக்ட் லீடர், மிடில் மேனேஜர் போன்ற பதவிகளுக்கும் பணி நியமனங்களை அவ்வப்போது மேற்கொள்கிறது. இவை தவிர அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பணி நியமனங்களை மேற்கொள்கிறது. விண்ணப்பதாரர்களை தொடர் ஆப்டியூட் தேர்வு, நேர்காணல் போன்ற கடுமையான தேர்வுகளுக்குட்படுத்தி மிகச் சிறந்தவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிறுவனம் இயங்குவதாக இந்த நிறுவனத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த கால பணி நியமன அனுபவங்களையும் மனதில் வைத்து இந்தத் தேர்வு முறை பின்பற்றப்படுவதாக நிறுவனத்தின் அதிகாரபூர்வ செய்தி தெரிவிக்கிறது.