உள்ளூர் செய்திகள்

அறிவியல்: மாணவர்களுக்கு ஆர்வம் குறைகிறதா...

பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் கல்லூரியில் சேரும் நேரம். மாணவர்கள் இன்ஜினியரிங், மருத்துவம், அறிவியல் என அவர்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்கின்றனர். தற்போது ஆங்கிலம் மற்றும் பொறியியல் படிப்புகளின் மோகத்தால் திறமையான, நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்கள் அறிவியல் படிப்புகளை கைவிடுகின்றனர். இதனால் எதிர்காலத்தில் அறிவியல் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் இன்ஜினியரிங் படிப்புகளில் தனியார் கல்லூரிகளின் ஆதிக்கம் அதிகமாக இல்லை. ஒன்றிரண்டு அரசு இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் தொழிற்படிப்புகளைத் தவிர, பெரும்பாலான மாணவர்கள் அறிவியல் பாடத்தையே விரும்பித் தேர்ந்தெடுத்தனர். அறிவியலில் குறிப்பாக இயற்பியல், வேதியியல் பிரிவுக்கு மிகப்பெரிய வரவேற்பும், வேலைவாய்ப்பும் இருந்தது. இதனால் பெரும்பாலோனோர் விஞ்ஞானிகளாக உருவாகினர். தற்போது இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், நான்கு ஆண்டு படித்தவுடன் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாலும் மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்பை அதிகளவில் தேர்வு செய்கின்றனர். மாறாக அறிவியல் பாடங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. பிளஸ் 2 அறிவியல், கணிதப் பாடங்களில் 80 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்கள், தற்காலிகமாக அறிவியல் கல்லூரிகளில் இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்கின்றனர். மருத்துவம் அல்லது பொறியியல் பிரிவு கிடைத்ததும், அறிவியல் படிப்பை கைவிடுகின்றனர். பி.எஸ்சி., அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுக்கும் போது, வெறும் பட்டப்படிப்போடு நின்றுவிட முடியாது. தொடர்ந்து எம்.எஸ்சி., மற்றும் பி.எட்., படித்தால் தான், தொழில்நிறுவனங்களில் அல்லது பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்களாக வேலைவாய்ப்பு பெறலாம். தொடர்ந்து படித்தால் ஆராய்ச்சியாளராக, பேராசிரியராக வரலாம். ஆனால் பொறியியல் படித்தால், இன்ஜினியர் என்ற பட்டத்தோடு, உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அறிவியல் பாடத்தை கைவிடுகின்றனர். உதவித்தொகை : பாடத்தை புரிந்து கொண்டு படிக்கும் மாணவர்களே, 80 சதவீத மதிப்பெண்களை பெறுகின்றனர். இவர்கள் அறிவியல் படிப்பைத் தேர்ந்தெடுத்தால், மத்திய அரசு உதவித்தொகை வழங்குகிறது. ஆனால் உதவித்தொகை பெறும் தகுதியுடைய மாணவர்கள் மருத்துவம், பொறியியல் படிப்பை நாடுவதால், உதவித்தொகை அறிவித்தும் உபயோகமில்லை. ஒருசில கல்லூரிகளைத் தவிர பெரும்பாலான கல்லூரிகளில் அறிவியல் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளது. குறிப்பாக உயிரியல், தாவரவியல் பாடப்பிரிவுகளில் சேர்க்கை குறைந்து வருகிறது. நிரந்தர வரவேற்பு : பி.காம், பி.பி.ஏ., பி.சி.ஏ., படிப்புகளுக்கு நிரந்தர வரவேற்பு இருக்கிறது. அதேபோல பி.ஏ., ஆங்கிலப் படிப்புக்கு அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சில கல்லூரிகளில் சுயநிதிப் பிரிவில் கூட மாணவர்கள் சேர்க்கை முடிந்துவிட்டது. அந்தளவுக்கு கடந்த இரண்டாண்டுகளாக கடும்போட்டி நிலவுகிறது. பி.ஏ., தமிழ்ப் பாடத்துக்கும் அதிக வரவேற்பு உள்ளது. கல்லூரிகளில் அறிவியல் படிப்பைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் ஆர்வம் குறைந்து வருவதால், எதிர்காலத்தில் அறிவியல் ஆசிரியர்கள் பற்றாக்குறையும், தகுதியான ஆசிரியர்களும் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே அரசு, தற்போதைய நவீன அறிவியல் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப அறிவியல் பாடப்பிரிவுகளில் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !