நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புகளுக்கு இளைஞர்கள்
பொதுவாக நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் நடுத்தர வயதுக்கும் அதிகமானவர்களே பதவி வகிப்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் சமீப காலமாக இந்த நிலைமை மாறி வருகிறது. குறிப்பாக ஐ.டி., துறையில் நிறுவனத்தின் தலைமைப் பதவிகளுக்கு இளைஞர்களைத் தேர்ந்தெடுப்பதை விரும்பும் நிலை உள்ளது. இளைஞர்களுக்கே இலக்குகளை அடையும் வெறியும், புதுப்புது சிந்தனைகளும் இருப்பதால் இவர்களின் மூலமே போட்டிகளைச் சமாளிக்க முடியும் என்று இந்த நிறுவனங்கள் நம்பத் துவங்கியுள்ளன. சில எக்சிகியூடிவ் பதவிகளில் பணி புரிய குறைந்த பட்ச அனுபவம் குறித்த தேவைகள் இருக்கும். சமீப காலங்களில் இந்த அனுபவத் தேவை என்பது கணிசமாகக் குறைந்துள்ளதாக எச்.ஆர்., நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒரு தனி நபரின் அனுபவம் 20 ஆண்டுகளா அல்லது 40 ஆண்டுகளா என்று யோசிக்காமல், அவரின் தலைமைப் பண்புகள், பிரச்னைகளை ஆராயும் திறன் போன்ற அம்சங்களுக்கு மதிப்பேற்பட்டு வருவதாக டீம் லீஸ் சர்வீசஸ் நிறுவனம் சமீபத்தில் தனது மதிப்பீட்டை தெரிவித்துள்ளது. தற்போது ஒருவரின் வேகம், இலக்கைப் பற்றிய குவிப்பு, இலக்கை நோக்கிய செயல், தொழில் நுட்பத் திறன், போட்டிச் சூழலுக்கேற்ற இயங்கு தன்மை போன்ற குணங்களைத்தான் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன என்றும் இவர்கூறுகிறார். ஐ.டி., ஐ.டி.இ.எஸ்., தொலைத் தொடர்பு போன்ற துறைகள் புதிய யுகத் தொழில்களாக உள்ளன. இந்தத் துறைகளுக்கேற்ற இலகுத் தன்மையும், அங்கீகரிக்கும் தன்மையும் இளைஞர்களுக்கே அதிகம் உள்ளதாக குளோபல் ஹண்ட் நிறுவனத்தின் இயக்குனர் கூறுகிறார். இளைஞர்களை நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புகளில் இருத்தும் போது அனுபவம் என்ற ஒன்றைத் தவிர்த்து அனைத்து தகுதிகளும் உள்ளன. இவை மட்டுமே பதவிக்கான அடிப்படைத் தேவைகளின் 90 சதவிகிதத்தை நிறைவு செய்து விடுகின்றன. தொழில் திறன், தாங்கி நிற்கும் திறன், வேகமாகப் புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றாலும், புதிய சிந்தனை சார்ந்த உத்திகளாலும் இளைஞர்கள் அனுபவசாலிகளையும் விஞ்சி நிற்கிறார்கள் என்று இவர் கூறுகிறார். தற்போதுள்ள தலைமுறையைச் சரியாகப் புரிந்து கொள்ள இளைஞர்களாலேயே முடியும் என்பதால் எச்.ஆர்., நிதி, அக்கவுன்ட்ஸ், நிர்வாகம், வாடிக்கையாளர் சேவை மற்றும் மார்க்கெட்டிங் துறைகளுக்கு இளைஞர்கள்தான் மிகவும் பொருத்தமானவர்கள் என்று பி.டி.ஐ., கன்சல்டன்ட் நிறுவனத்தின் தலைவர் கூறுகிறார்.