அமெரிக்க பல்கலை வளாகம்
நமது நாட்டு பல்கலையில் நிலவும் சூழ்நிலையிலிருந்து அமெரிக்க பல்கலைக்கழக வளாகங்கள் பெரிதும் வித்தியாசப்படுகின்றன. அமெரிக்க பல்கலை வகுப்புகள், இசைக்குழு வெளிப்படுத்தும் மென்மையான மனதை வருடும் ஒத்த இசையை போன்று இருக்கும். மாணவர்களும், ஆசிரியர்களும் ஒரே விதமான அலைவரிசையில் இருப்பார்கள். மாணவர்கள் எளிதில் அணுகவும், பழகவும் ஏற்ற நண்பர்களாக ஆசிரியர்கள் இருப்பார்கள். அன்றைய வகுப்புக்கு வரும் மாணவர்கள் தேவைப்படும் அனைத்து விதமான தகவல்களுடன் தயாராக வருவார்கள். தேர்வு நாட்கள், பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் மாணவர்கள் பல்கலையில் சேர்ந்த முதல் நாளன்றே அளிக்கப்பட்டுவிடும். மாணவர்கள் புத்தகங்களை தாண்டிய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு அங்குள்ள பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாணவரும் பாடம் சார்ந்த முறையில் தங்கள் ஆசிரியரை அடிக்கடி சந்திக்கும் வழக்கத்தை கொண்டிருப்பார்கள். அதிகமான தேர்ச்சி விகிதத்தைவிட மாணவர்கள் எந்தளவு பாடங்களை புரிந்து வைத்துள்ளனர் என்ற எதிர்பார்ப்பே ஆசிரியர்களிடம் மிகுந்து காணப்படும். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிப்பவர்களுக்கு பாடங்களை மனப்பாடம் செய்யும் அவசியமே ஏற்படாது. அங்கு கல்வி பயிலும் ஒவ்வொரு மாணவரும் தங்களை பற்றி சுயநிர்ணயம் செய்து கொள்ளும் வகையில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குழுவாக ஓருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் முறையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கல்வியை சுமையாக நினைத்து படிக்கும் அவசியம் அங்கு இல்லை மாறாக பொழுதுபோக்காக மனதுக்கு பிடித்த விஷயமாக இருக்கிறது. ஒவ்வொரு அமெரிக்க பல்கலைக்கழக நூலகத்திலும் உலகளவில் வெளியாகும் எண்ணற்ற அறிவுசார் இதழ்கள் இடம்பெற்றிருக்கும். மேலும் நூலகங்களில் கணினி மூலம் ஏராளமான அரிய தகவல்களை உள்ளடக்கிய "டேட்டாபேஸ்' நிர்வகிக்கப்படுகிறது. இவை அனைத்தையும் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக படிக்க முடியும் என்பது தனிச்சிறப்பு. தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், விஞ்ஞானிகள், பல்வேறு துறை வல்லுனர்கள் என மாணவர்கள் கலந்துரையாடும் வகையிலான நிகழ்ச்சிகளுக்கு பல்கலைக்கழகங்கள் சார்பில் அவ்வப்போது ஏற்பாடு செய்யப்படும். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் பல அனுபவ பாடங்களை தெரிந்துகொள்ள மாணவர்களுக்கு பெரிதும் உதவும். அங்கு படிக்கும் மாணவர்கள் பொய் பேசுதல், ஏமாற்றுதல் மற்றும் திருடுதல் போன்ற குணங்களற்றவர்களாக மாற்றும் முறையிலான நடவடிக்கைகளை பல்கலைக்கழகங்கள் பின்பற்றி வருகின்றன. மாணவர்கள் தங்கள் லேப்டாப், செல்போன் போன்ற விலை உயர்ந்த பொருட்களை தங்கள் மேஜையிலேயே வைத்துவிட்டு செல்லும் வழக்கத்தை கொண்டிருப்பார்கள். இதுபோன்ற பழக்க வழக்கங்கள் வெகுசாதாரணமாக அங்கு பின்பற்றபடுகின்றன என்பதே நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம். இவ்வாறான வெளிப்படையான பழக்க வழக்கங்களை அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மாணவர்களிடம் விதைக்கின்றன.