நெட் தேர்வு: தீர்ப்பும் எதிர்பார்ப்பும்
சமீபத்தில் சென்னை மற்றும் டில்லி ஐகோர்ட்கள் வெளியிட்ட உத்தரவுகள், உயர்கல்வி தொடர்பான மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்திவிட்டது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராக வேண்டும் என்று விரும்புவோர், பல்கலைக்கழக மானியக் குழுவான (யு.ஜி.சி.,) நடத்தும் தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்று இரு கோர்ட்களும் தீர்ப்பு வழங்கியுள்ளன. கடந்த ஜூன் 30ம் தேதி, யு.ஜி.சி., வெளியிட்ட விரிவுரையாளர்களுக்கான குறைந்த பட்ச தகுதியில், 2009ல் வெளியான விதிமுறைகளின் கீழ் வழங்கப்பட்ட பிஎச்.டி., முடித்தவர்கள் தவிர, மற்ற அனைவரும் விரிவுரையாளராக தகுதி பெற நெட் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இதற்கு முன் வெளியான யு.ஜி.சி., விதிமுறைகளில் பிஎச்.டி., படித்தவர்களுக்கு நெட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. 1993ம் ஆண்டுக்கு முன்பாக எம்.பில் முடித்தவர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆகவே புதிய யு.ஜி.சி., விதிமுறையை எதிர்த்து, இந்திய ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் அமைப்பு வழக்குத் தொடர்ந்திருந்தது. எம்.பில் மற்றும் பிஎச்.டி., முடித்தவர்களுக்கு தொடர்ந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தது. இதற்கிடையில் வெளியான யு.ஜி.சி., கமிஷனின் 472வது அறிக்கையின் படி, யு.ஜி.சி.யின் 2009 பிஎச்.டி., படிப்புக்கான குறைந்த பட்ச விதிமுறைகள் அமலான 11 ஜூலை 2009க்கு முன்பாக, எம்.பில் மற்றும் பிஎச்.டி., படித்தவர்கள் தேசிய தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள் என்று அறிவித்திருந்தது. 472வது கமிஷன் அறிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்ததால், 2010 யு.ஜி.சி.,யின் குறைந்தபட்ச தகுதியை உறுதிப்படுத்தும் விதமாக தீர்ப்பு அமைந்துவிட்டது. பல்கலைக்கழக மானிய குழுவின் 2006ஆம் ஆண்டின் கொள்கைப்படி, பிஎச்.டி., ,எம்.பில் படித்தவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. புதிய விதிமுறை இதற்கு முற்றிலும் மாறாக இருப்பதால், நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தேசிய அளவில் உள்ள கல்வி நிலையங்களில் பணிபுரிய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. பல பல்கலைக்கழங்களில் பிஎச்.டி., மற்றும் எம்.பில் படிப்புகள் முறையாக வழங்கப்படாததால், கல்வித் தரம் குறையும் அபாயம் உள்ளது என்று ஐகோர்ட் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் கடுமையான தேர்வுகள் வழியாக பிஎச்.டி., மாணவர்களை தேர்வு செய்வதால், தரமான ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்க முடிகிறது. அதுபோன்ற கடுமையான வழிமுறைகள் மட்டுமே இந்தியாவிலும் சிறந்த ஆராய்ச்சியாளர்களை உருவாக்க முடியும். வகுப்புவாரியாக நெட் தேர்வுக்கு மதிப்பெண்கள் அளிப்பதில் யு.ஜி.சி., விதிமுறைகளை தளர்த்தியும் உள்ள, அதே நேரத்தில் 2010 குறைந்தபட்ச தகுதி முறைகளையும் கடுமையாக்கி உள்ளது. இந்திய ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் அமைப்பு தீர்ப்புகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்வதாக அறிவித்துள்ளது. பிஎச்.டி., மற்றும் எம்.பில்., முடித்தவர்கள் நெட் தேர்விலிருந்து விலக்கு பெற முடியுமா என்பது அங்குதான் தெரியும்.