மருத்துவக் கட்டணம் உயர்கிறதா
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என அக்கல்லூரிகள் கோரிக்கை விடுத்துள்ளதால், இந்தாண்டு மருத்துவக் கட்டணம் உயர்த்துப்படுமோ என்ற அச்சம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழகத்தில் 6க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக்கல்லூரிகள், எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் அங்கீகாரம் பெற்றுள்ளன. இந்த தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் புதிதாக கட்டணங்களை நிர்ணயிப்பதற்கு அரசு சார்பில் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவிடம் தனியார் மருத்துவக்கல்லூரிகள் கட்டணங்களை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளன. கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களின் விலை உயர்வு, வெளிநாட்டில் இருந்து சில உபகரணங்கள் வாங்கப்படுகின்றன. இதற்கு அதிகளவில் வரி கட்ட வேண்டியுள்ளது. மேலும் 6வது ஊதிய உயர்வின் படி ஆசிரியர்களின் சம்பளமும் அதிகரித்துள்ளது. இதனால் படிப்புக்கான கட்டணங்களை உயர்த்த வேண்டியது அவசியம் என தனியார் மருத்துவக்கல்லூரிகளின் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு ஆண்டுக்கு 3 லட்ச ரூபாயும், பி.டி.எஸ்., படிப்புக்கு ஆண்டுக்கு 75 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை 3 லட்ச ரூபாயில் இருந்து 4.5 லட்ச ரூபாயாகவும், 75 ஆயிரம் ரூபாயிலிருந்து 1.5 லட்சம் ரூபாயாகவும் உயர்த்த வேண்டும் என்று தனியார் மருத்துவ கல்லூரிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.