அதிக நிபுணர்கள் தேவைப்படும் கட்டிடக்கலை துறை
கட்டிடங்களை கட்டுவதற்கு கலையையும், அறிவியலையும் இணைத்து உருவான துறைதான் கட்டிடக்கலை(Architecture). கட்டிடக் கலைஞரின் வழக்கமான தொழில் என்னவென்றால், மாதிரிப்படம் வரைதல், திட்டமிடல், மாதிரிகளை தயார் செய்தல், ஆகும் செலவினங்களை மதிப்பீடு செய்தல், அதிகாரிகளிடம் கட்டிட அனுமதியைப் பெறுதல் போன்றவையாகும். தனது திட்டத்திற்கு, கட்டிடம் கட்டுபவரின் அனுமதியைப் பெற்றபிறகு, சர்வேயர்கள், கட்டுமான நிறுவன அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களிடம், கட்டிடக் கலைஞர் பேச்சுவார்த்தை நடத்துவார். ஒரு கட்டிடம் கட்டுவதற்கான திட்டத்தை தொடங்குவதிலிருந்து, அந்த கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்படும் வரையான அனைத்து வேலைகளுக்கும், கட்டிடக் கலைஞரே(Architect) பொறுப்பு. கட்டிடம் கட்டுபவரின் திருப்தி, பாதுகாப்பு, அழகு போன்ற பல அம்சங்களையும் கட்டிடக் கலைஞர் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் அதிகமான கட்டிடப் பணிகள் நாடு முழுவதும் நடந்துகொண்டிருப்பதால், கட்டிடக்கலை நிபுணர்களுக்கு தேவை அதிகம். ஆனால், தேவைக்கேற்ப அவர்கள் கிடைப்பதில்லை. இத்தொழிலுக்கு தேவைப்படும் பண்புகள்: அழகுணர்ச்சி, படைப்புத் திறன், கற்பனைத் திறன், நல்ல உள்வாங்கும் திறன், வடிவமைக்கும் திறன், கணிதத் திறன், நல்ல தகவல் தொடர்பு திறன், கடினமாக உழைப்பதற்குரிய உடல் வலிமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை மற்றும் பொறுப்புடன் செயல்படுதல் ஆகியவை இந்த தொழிலுக்கான முக்கிய பண்புகள். வேலை வாய்ப்புகள்: அரசு மற்றும் தனியார் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. அரசு துறைகள் என்று எடுத்துக்கொண்டால், ரயில்வே, தபால்-தந்தி துறை, மாநில, மாநகர மேம்பாட்டு ஆணையங்கள், பொதுப்பணி துறை, அகழ்வாராய்ச்சி துறை, பாதுகாப்பு துறை, நகர்புற விவகாரங்களுக்கான தேசிய நிறுவனம், தேசிய கட்டிட கட்டுமான கழக நிறுமம், நகரம் மற்றும் நாடு திட்டமிடுதல் அமைப்பு, வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு கழகம், வீட்டு வசதி வாரியங்கள் போன்ற பல பிரிவுகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. தனியார் துறையைப் பொறுத்தவரை, கட்டுமான நிறுவனங்கள், கட்டுமான ஆலோசகர்கள் போன்ற அமைப்புகளிடம் வேலைவாய்ப்புகள் உள்ளன. அதேசமயம், நாமே சொந்தமாக கட்டுமான ஒப்பந்தகாரர்களாகவோ, ஆலோசகர்களாகவோ நமது தொழிலை நடத்தலாம். இத்துறையில் எப்படி நுழைவது: 5 வருட இளங்கலை கட்டிடக்கலை(B.Arch.) படிப்பில் சேர்வதற்கு, பள்ளி மேல்நிலைப் படிப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும். மேலும் மூன்றிலும் கூட்டுத்தொகையாக 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பின்னர், கட்டிடக்கலை கவுன்சிலால் அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேசியளவிலான கட்டிடக்கலை திறனாய்வு தேர்வை(NATA) எழுத வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 5 வருட இளங்கலை கட்டிடக்கலை படிப்பில் சேர இந்த தேர்வில் கட்டாயம் தேறியிருக்க வேண்டும். அதேசமயம், நாட்ட தேர்வில் குறைந்தபட்ச(40 சதவீதம்) பெற்றிருக்கவில்லை என்றால், ஒருவர் கட்டிடக் கலைஞராக தன்னை பதிவு செய்துகொள்ள முடியாது. இத்தேர்வை பற்றிய மேலும் விவரங்களை அறிய www.nata.in என்ற வலைத்தளம் செல்லவும். மேலும் மேற்படிப்பு மேற்கொள்ள விரும்புபவர்கள் முதுகலை கட்டிடக்கலை படிப்பிலும் சேரலாம். NATA தேர்வு என்பது, ஒரு மாணவரின் 2 விதமான திறமைகளை சோதிப்பதாகும். அழகுணர்ச்சியில் ஒருவரின் திறனை சோதிப்பது முதல் வகை. வரையும் திறனை சோதிப்பது இரண்டாம் வகை. பேப்பர் அடிப்படையிலான வரைதல் தேர்வு 2 மணி நேரமும், கணினி அடிப்படையிலான அழகுணர்ச்சி சோதனை தேர்வு 1 மணி நேரமும் நடக்கும். பேப்பர் தேவு முடிந்த பிறகுதான் கணினி தேர்வு நடக்கும். வரைதல் தேர்வில், தேர்வெழுதுபவர், 2 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். கட்டிடக்கலை படிப்பை மேற்கொள்வதற்கான சில முக்கிய கல்வி நிறுவனங்கள்: Anna University - Chennai. School of Planning and Architecture(www.spa.ac.in) - New Delhi. IIT Kharagpur. School of Architecture CEPT, (www.cept.ac.in) - Ahmedabad. Panjab university - Chandigarh. University of Mumbai - Mumbai. Guru Nanak Dev University(www.gndu.ac.in) - Panjab. IIT Roorkee. R.V. College of Engineering (www.rvce.edu.in).